தமிழ் சினிமாவின் பொற்காலமான 80 களில் திரை ரசிகன் கொண்டாடிய தேவதைகள் பலர். அப்படியான காதாநாயகிகளை பற்றிய தொகுப்பு.
80களின் நாயகிகள் தமிழ் சினிமா வரலாற்றின் தேவதைகளான கதை ஒரு வரலாறு. அவர்களுள் தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் பச்சை குத்திய முக்கிய பெயர் ‘மயிலு’. 80 களில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஸ்ரீதேவிதான் இந்த மயில். மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீதேவி அதி விரைவில் ரசிகர்களின் அன்பு முடிச்சுகளில் சிக்கிக் கொண்டார். அதுமுதல் ’செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே’ என ஊஞ்சலில் ஆடும் ஸ்ரீதேவியின் அழகில் தமிழ் ரசிகர்கள் மதிமயங்கி அந்த ஊஞ்சலோடு ஆட தொடங்கினர்.
அறுபதுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய பத்மினி-ராகினி போல் எண்பதுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய சகோதரிகள் அம்பிகா-ராதா. ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரின் ஆஸ்தான நாயகிகளாக வலம் வந்தனர் இவர்களிருவரும். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகமான நாளில் இருந்து முதல் மரியாதை திரைப்படத்தில் நாடோடி பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கும் “வெடல புள்ள” ராதா வரை அவர் மேல் தமிழ் ரசிகர்கள்கொண்ட நேசம் இன்று வரையும் மாறவில்லை என்பது உண்மை
பாரதிராஜாவின் மண் வாசனை தந்த குட்டி தேவதை ரேவதிதான் 80-களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்தார். தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வசீகரித்து ’கை கொடுக்கும் கை’,’புதுமை பெண்’,’உன்னை நான் சந்தித்தேன்’,’ஒரு கைதியின் டைரி’,’மவுன ராகம்’ என அடுத்தடுத்து நடித்த ரேவதியை தமிழக ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்க தொடங்கினர். ஆம்.. இன்றுவரை தமிழ் சினிமாவின் சின்ன வண்ணக் குயில் ரேவதி மட்டுமே..
முகப்பூச்சு இல்லா வசீகர தோற்றத்தாலும் தன் எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் ஷோபா. படம் பிடிக்கும் கேமராவே வெட்கம் கொள்ளும் அளவுக்கு காட்சிகளில் வெட்கத்தை தெளிக்கும் ஷோபா, பிரதாப் போத்தனுடன் நடித்த மூடுபனி திரைப்படம் ரசிகர்களை இவரிடம் உயிர் நழுவ செய்தது. தன் சிறுசிறு முக பாவனைகளால் தமிழ் ரசிகர்களை வெட்கம் கொள்ள வைத்த, வராது வந்த தேவதைதான் ஷோபா.
ஒரு நடிகையின் உடையும் அலங்காரமும் அணிகலன்களும் தமிழ்நாட்டின் பேசு பொருளாக ஆனதென்றால் அது நடிகை நதியாவின் வருகைக்கு பின்பே. ஆண் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பெண் ரசிகைகளையும் தன் பால் ஈர்த்தவர் இந்த நைல் நதியா. 80-களின் தமிழ் ரசிகர்களை ‘மைதிலி என்னை காதலி’ என கூச்சலிட செய்தவர் அமலா. பரத நாட்டியத்தை முறைப்படி கற்றிருந்த அமலாவின் கால் கொலுசின் சப்தங்கள் அன்றைய தமிழ் ரசிகனின் இதயத் துடிப்பை எகிறச் செய்தன. தொடர்ந்து ’மெல்ல திறந்தது கதவு’ ’வேலைக்காரன்’ ‘சத்யா’ ‘அக்னி நட்சத்திரம், திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயக் கதவை மெல்ல திறந்து அவர்களின் கனவு நாயகி ஆனார் அமலா.
நன்றி : tamil.news18