வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டி வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றபோது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இன்று (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரண்டு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.
மாணவர்கள் விழுந்ததை அவதானித்த பிறிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து குறித்த மாணவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட இரண்டு மாணவர்களும் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் மீது இறந்த மாணவர்களின் உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
அவ்விடத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் அதிகமாகப் பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து இரு தரப்பினரையும் சுமுக நிலைக்குக் கொண்டு வந்திருந்ததுடன் துணைவேந்தரைப் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அழைத்துச் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 14 வயது மற்றும் 15 வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.