புதிய வகைக் கொரோனா தொற்றுக்கு எதிரான மேலதிக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கம் தமது மக்களுக்கு அறிவுறுத்தத் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வைரஸ் தொற்றுச் சம்பவங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள போதிலும், ஒட்டுமொத்த அளவு குறைவாகவே இருப்பதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
XBB.1.5 வகைக் கிருமியை எதிர்க்கக்கூடிய தடுப்பூசிகளை Moderna, Novavax, Pfizer, BioNTech SE ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
அவற்றுக்குச் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எனினும், எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசிகள் பயன்படுத்துவதற்குத் தயாராகிவிடும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
சளிக்காய்ச்சல், RSV தடுப்பூசிகளுடன் சேர்த்து, புதிய COVID தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளுமாறு அமெரிக்கர்கள் ஊக்குவிக்கப்படுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.