செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும்”

“நீதி அமைச்சர், சட்டமா அதிபர் உடன் பதவி விலக வேண்டும்”

2 minutes read

“தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்லுகின்ற நிலையில் இருக்கக்கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகக் தெரிகின்றது.”

– இவ்வாறு ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கின்றது?

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர். நியாயமான தீர்ப்பை அவர் வழங்கியதால் தென்னிலங்கையிலே அவர் ஓர் இனவாதியாகவும், ஒரு தமிழராகவும் பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித்தான் இன்றைக்கு நீதிமன்றத்துக்குச் செல்கின்றார்கள்.

ஆனால், இப்போது இருக்கின்ற நிலையைப் பார்க்கும்போது தமிழ் நீதிபதிகள் நியாயமாகச் செயற்படுகின்ற வாய்ப்பைத் தடுக்கின்ற – அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமா செய்தி இதனை உணர்த்துகின்றது.

ஆகவே, தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பைச் சொல்கின்ற நிலையில் இருக்கக் கூடாது, அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத்தான்  வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நீதித்துறைக்கு விட்ட சவாலாக இது அமைந்துள்ளது.

நீதி அமைச்சர் இந்த விடயத்தை ஆராய வேண்டும். முல்லைத்தீவு நீதிபதியின் இராஜிநாமாவில் அழுத்தம், உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும்போது நீதிக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்.

ஏனென்றால் நீதி நடுநிலையானது. அது யாருக்கும் தலைசாய்வதில்லை. அந்தவகையில் எங்களுடைய நீதிபதி சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அவரின் குருந்தூர்மலை தீர்ப்பு அவருக்குப் பல அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. இதில் புத்த பிக்குகளின் கூட்டமும் அடங்குகின்றது என எண்ணுகின்றேன். இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் புத்த பிக்குகளா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் அனைத்து நீதிபதிகளையும் காப்பாற்றுகின்ற பொறுப்பு எங்களுக்கும், எங்களுடைய மக்களுக்கும் இருக்கின்றது.

ஆகவே, தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட வேண்டுமென்றால் நீதித்துறைக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளவர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

சட்டமா அதிபரின் அழுத்தம் உள்ளது என்று  நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரும் இராஜிநாமா செய்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதன் ஊடாகவே நீதித்துறையை நடுநிலைமைக்குக் கொண்டு வர முடியும்.

முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்கின்ற அளவுக்கு மிக மோசமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நீதி அமைச்சரும், சட்டமா அதிபரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More