17
( போர்க்களத்தின் ஊடகவியலாளரான நிமலராஜன் 2000 அக்டோபர் 19இல் படுகொலை நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
ஈழத்தில் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
1981இல் ஈழநாடு எரிப்புமுதல், பின்னர் இந்திய இராணுவத்தால் முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம் தகர்க்கப்பட்டதில் இருந்து தமிழ் ஊடகங்களின் மீதான அடக்குமுறை பல்வேறு காலங்களில் ஆதிக்க சக்திகளினால் பிரயோகிக்கப்பட்டது.
தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்னம் சிவராம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், லசந்த விக்கிரமதுங்க, பரணிரூபசிங்கம் தேவகுமார், என சுதந்திர ஊடகத்துறையை காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
றிச்சட் டி சொய்சா படுகொலை :
சிறிலங்காவிலும்்1990ம் ஆண்டு இன்ரர் பிறஸ் சேர்வீஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளன் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதோடு இந்த நீண்ட கறைபடைந்த வரலாறு தொடர்ந்தது எனலாம். 28 ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு நிச்சட் டி சொய்சாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது உடலை அடையாளங்கண்டு கொண்டவர் தராகி என்ற தர்மரட்ணம் சிவராம் தமிழ் நெற் இணையத்தினுடய ஆசிரியரான இருந்தவர். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைப்பட்டியல் பின்னர் நீண்டு அதிகரித்து வந்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மைத்தகவல்களை வெளிக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
நிமலராஜன் படுகொலை:
பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன்
கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்லப்பட்டார்.
ஈழப் போரின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் 22 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
கொடூரமான போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளையில் பலத்த
ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி கொண்டிருந்தவர் நிமலராஜன்.
அச்சுறுத்தல் மிகுந்த பணி
நிமலராஜனுக்கு அச்சுறுத்தல்கள் வருவது ஒரு தொடர்கதையாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஊடகவியலில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் அவர் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
யாழ்ப்பாணத்தில் கிட்டதட்ட எல்லாரையும் அவருக்கு தெரியும், அவருக்கும் அனைவரையும் தெரியும் என்கிறது அவர் இறப்பு குறித்து வெளியான பிபிசியின் இரங்கல் செய்தி.
நிமலராஜனின் ஊடகப்பணி என்பது கடுமையான பணியாகதான் இருந்தது. அந்த சமயத்தில் மின்சார இணைப்பும் இல்லை. அவர் சைக்கிளில் சென்றுதான் செய்திகளை சேகரித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஆபத்துகளும் அதிகம் இருந்தன. பலதரப்பட்ட அரசியல் அச்சுறுத்தல்களும் இருந்தன.
இருளில் நடந்த கொலை
போர்க்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற பொதுதேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் செய்தி வழங்கினார். அதில் தற்போது இலங்கையில் அரசியல் கட்சியாக இருக்கும் ஓர் கட்சி மோசடி செய்ததாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நிமலராஜன் கொல்லப்பட்ட அன்றும்்பத்திரிகை செய்தி ஒன்றை எழுதி கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நிமலராஜனை துப்பாக்கியால் சுட்டனர். நிமலராஜன் கொலை தொடர்பாக சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்று வரை இந்த கொலை குற்றம் யார் மீதும் நிரூபிக்கப்படவில்லை.
சமூக விடுதலைக்கான நடேசன் குரல் :
2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட துயர நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடு வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.
கிழக்கு பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு தனியார் பத்திரிகை ஒன்றில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. மிக காரசாரமானதும் துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.
2004 மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் மரணத்தை எதிர்பார்த்த வேளையிலும் பேனாவை கீழே வைப்பதற்கு மறுத்தவர் நடேசன்.
“நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடுபட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன்” என்பது நடேசனின் வாசகங்கள். நடேசனின் இந்த கருத்து நிதர்சனமானது என்பது தமிழ் பத்திரிகை உலகம் பின்னர் கண்ட உண்மை.
சிவராமின் ஆங்கிலப் புலமை :
தமிழர்களின் போராட்டம் ஒரு நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார். சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.
பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.
சிவராம் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.
தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.
அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.
மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
உதயன் மிதான தாக்குதல் :
2006இல்்திருகோணமலையில் ஆறு மாணவர்களின் கொலையை வெளிப்படுத்தியதற்காக உதயன், சுடர் ஒளி நிருபர் சுப்பிரணியம் சுஜிதராஜ் கொல்லப்பட்டார்.
2006ம் ஆண்டு ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலையென வர்ணிக்கப்படுகின்ற உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு பணியில் இருந்த இருவரை சுட்டக் கொன்றார்கள். இது ஊடக நிறுவனத்தக்குள் புகுந்து நடத்தப்பட்ட மிகப்பெரியதும் முக்கியமானதுமான தாக்குதலாகும்.
இதில் தாக்குதலை நடத்தியவர்கள் இலகுவாக கைது செய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருந்த போதும் அது தொடர்பாக எவரொருவரும் கைது செய்யப்பட்வில்லை விசாரிக்கப்படவில்லை. இந்தக்காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
வன்னியின் குரல் சத்தியமூர்த்தி :
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று இறந்தார்.
ஊடகத்துறையில் 1990-களில் ஈடுபடத் தொடங்கிய இவர்,
“வெளிச்சம்” சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார். ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.
2003 ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி.
நீதி மறுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்:
அமெரிக்காவிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக செயல்படும் ‘கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு இலங்கையில் 1992ஆம் ஆண்டு காலத்திலிருந்து 2022ஆம் ஆண்டு காலம் வரை 25 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.
ஆனால் இந்த எண்ணிக்கை 39க்கும் அதிகம் என்பதே உண்மையாகும்.
நிமலராஜனின் மரணத்திற்கு பிறகு வட கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மட்டும் 39க்கும் மேற்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சொல்லிக் கொள்ளத் தக்க வகையில் இலங்கை சார்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்