(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளது)
கோபியும் நானும் நெருக்கமான சிநேகிதர்கள். ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒருநாள் கூட நகராது. காலையில் அவன் என்வீட்டில் காப்பி குடித்தால், மதியம் அவன் வீட்டில் நான் சாப்பாடு சாப்பிடுவேன். அவ்வளவு அன்யோன்யமான நண்பர்கள்.
அவன் குடியிருந்த வீட்டுக்காரர் அவனை ஓர் அரசியல் கட்சியில் இணைத்து விட்டார். எனக்கு அரசியலில் ஆர்வமே கிடையாது.
எனக்கும் அவனுக்கும் இந்த அரசியல் காரணமாக முதன்முதலாக இடைவெளி தோன்றத் தொடங்கியது. தன் அரசியல் கட்சியின் உயர்வைப் பற்றி அவன் என்னிடம் சொல்வது எனக்குப் பிடிக்காததால், எங்களிடம் இருந்த இடைவெளி அதிகமானது. நட்பு குறைந்தது.
இப்போதெல்லாம் நாங்கள் இருவரும் சில நாட்கள் சந்திக்காமலேயே இருந்தது உண்டு. ஆயினும் என் மனதில் அவன் நினைவு அப்போதுக்கு அப்போது வந்துபோகும். அது சற்றும் வெளியே தெரியாதவாறு நான் இருப்பேன். அவன் மனது எப்படியோ தெரியாது எனக்கு.
அமெரிக்காவில் இருக்கும் அவனது உறவினரது பண உதவியால் கோபி சொந்தமாக ஒரு வீடு கட்டினான். எங்களுக்கிடையே இருந்த மன வித்யாசத்தின் காரணமாக அவன் சம்பிரதாயத்துக்காக, நேரில் வராமல் என்னை டெலிபோனில் அழைத்தான். நான் பேசாமல் என் உறவினர் பையனை விட்டு பதில் சொல்லச் சொன்னேன். தான் கட்டும் வீட்டுக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வருமாறு என்னைக் கேட்டுக்கொண்டான். நான் போகவில்லை. தான் கட்டிய வீட்டுக்கு தன் பெயரான கோபி இல்லம் என்று அவன் பெயர் வைத்திருப்பான் என்று நினைத்தேன்.
அவன் கட்டியுள்ள வீடு உள்ள நெரு வழியாக மறுநாள் நான் காரில் போனேன். அவன் வீட்டுவாசலில் “சீனை இல்லம்” என்று பெயர் இருந்தது. நான் அதிர்ந்து போனேன். சீனை என்றுதான் அவன் என்னை அழைப்பான். அந்தப் பெயரை அவன் தன் இல்லத்துக்குச் சூட்டியிருந்தது அவன் கொண்டிருந்த நட்பின் ஆழத்தைக் காட்டியது. அவன் என்மேல், உள்ளத்தில் கொண்டிருந்த தன் நட்பை, தன் வீட்டுக்கு என் பெயரைச் சூட்டியிருந்ததிலிருந்து எவ்வளவு உண்மை என்று காட்டிவிட்டான்.
நான் என் சிறுமையை நினைத்து வெட்கப்பட்டேன். அவன் வீட்டினுள் சென்று “கோபி” என்று அவனை அணைத்துக் கொண்டு கண்கலங்கிளேன்.
நட்பின் எல்லையைக் காட்டி விட்டான் கோபி. எங்கள் நட்பு தொடரவேண்டும் என்கிற ஆவலில் இப்போதெல்லாம் அவனைத் தேடித்தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டேன் நான்.
பெப்ரவரி 2018