செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?’ | ராமதாஸ் கண்டனம்

‘தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?’ | ராமதாஸ் கண்டனம்

3 minutes read

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.  கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது.

 

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தகட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களைக் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது. ஆனால்,  அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை  இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை  பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி  தண்டம் விதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும்,  சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு  என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More