லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் நேற்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் 40 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன. இவற்றில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அடைத்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர். அவற்றில் கொக்கைன் என்ற போதை பொருளும், ‘கேப்டகான்’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளும் இருந்தன. அவற்றை லெபனானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போதை மருந்து மற்றும் மாத்திரைகளை 5 பேர் கடத்த முயன்றது தெரிய வந்தது.
அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் ஆவார். எனவே அவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் சவுதி இளவரசர் ஒருவர் அமெரிக்காவில் ‘செக்ஸ்’வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.