இந்தியா – கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய மருந்துவ துறையே ஸ்தம்பித்துள்ளது.
பயிற்சி பெண் மருத்துவரின் கொடூர கொலைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் நேற்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவச் சேவைகள் இந்தியா முழுதும் தடைப்பட்டன.
இதனையடுத்து, மருத்துவத் துறை ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்படி இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பரிந்துரைகளை ஆராய்வதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்திள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, இரவில் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் ‘ராத்திரேர் ஷாதி’ [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, நகர்களில் CCTV கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, ஆபத்து சமயங்களில் பொலிஸை உடன் தொடர்புகொள்ள ஏற்ற வகையில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.