புகைப்பிடிக்காத நாடாக இங்கிலாந்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுப்பதாக சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகையிலையை படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது வெளியில் புகைபிடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
அதன்படி, பப் கார்டன்கள், வெளிப்புற உணவகங்கள், வெளி மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைபிடிப்பதை தடை செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களம் கசிவுகள் குறித்து த சன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இறுதியாக இங்கிலாந்தை புகைப்பிடிக்காததாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பில் செய்தித் தொடர்பாளர் ஒருவர்,
“கசிவுகள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. புகைபிடித்தலால் ஒரு வருடத்திற்கு 80,000 பேர் மரணிக்கின்றனர். இது NHS மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், இதற்காக வரி செலுத்துவோர் பில்லியன்களை செலவழிக்க நேரிடுகிறது.
“குழந்தைகள் மற்றும் புகைப்பிடிக்காதவர்களை இரண்டாவது கை புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
“இறுதியாக இங்கிலாந்தை புகைப்பிடிக்காததாக மாற்றுவதற்கான பல நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிஷி சுனக் பிரதமராக இருந்தபோது, புகைப்பிடித்தல் இல்லாத தலைமுறையை உருவாக்கவும், புகைபிடித்தல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் திட்டங்களை வகுத்தார்.
ஆனால், மே மாதம் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பிறகு அவரது புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா கிடப்பில் போடப்பட்டது.
அதேவேளை, தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமுலில் இருக்கும் புகைபிடிக்கும் தடையை வெளிப்புற இடங்களுக்கும் கடுமையாக நீட்டிக்க திட்டமிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.