“தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் ஓரணியாக இருக்கின்றார்கள் என்ற செய்தியைச் சொல்வதற்கு எனக்கு வாக்களியுங்கள்.” – என்று தமிழ் மக்களிடம் கோரியுள்ளார் தமிழ்ப் பொதுவேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சிபாரிசுக்கமைய சுயேச்சையாகப் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனிடம். “உங்களுக்குத் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?” – என்று ‘வணக்கம் இலண்டன்’ கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சிங்களத் தலைவர்களால் காலங்காலமாகத் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரான நான் போட்டியிட்டாலும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வரப் போவதில்லை. ஆனால், சிங்களத் தரப்புக்கும், சர்வதேசத்துக்கும் எனக்கு அளிக்கப்படும் வாக்குகள் பலமான செய்தியைச் சொல்லும். தமிழ் மக்கள் ஓரணியில் நிற்கின்றார்கள் என்பதே அந்தச் செய்தி.
அடுத்தது தமிழர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்பதை வெளியுலகத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.” – என்றார்.