நிமிடத்துக்கு நிமிடம், செக்கனுக்கு செக்கன் சமூக, பொருளாதார, கலாசார, விஞ்ஞான, அரசியல் துறை ரீதியாக தொழிநுட்ப மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 21ம் நூற்றாண்டில் பாதிக்கப்பட்டு வரும் அதிமுக்கிய பிரிவினரான முதியவர்கள் அமைகின்றனர். ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் பேணிப்பாதுகாத்த ‘இன்றைய முதியவர்களே அன்றைய இளைஞர்கள்’ ஆகையால் அவர்களது சுதந்திரம், உரிமை, கடமை என்பன தம்பிள்ளைகள் மற்றும் சமூகம் சார்ந்து பாதுகாப்பானதாகவும், நீதியானதாகவும் அமைய வேண்டும். முதியவர்கள், நாடளாவிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் அங்கீகாரம், கௌரவம், உரிமை, சுதந்திரம், தனித்துவம் தொடர்பில் மதிப்பளித்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய தெய்வங்களாவர். அவர்களுக்கு நிகர் பூமியில் உண்டா என்பதற்கமைய தனது அனுபவத்தால், கல்வியால், பக்குவத்தால், முயற்சியால் உலகை வென்ற, அனுபவித்த, அறிவுக்கு விடைதேடிய அனுபவசாலிகள்; புத்திசாலிகள்;;; பொறுமைசாலிகள் அவர்களே!
உலக நாடுகளிலுள்ள முதியவர்கள் பற்றிய புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு 14.12.1990 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அன்று தொட்டு இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதியவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையில் பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதியவர்களாவர்.
முதியவர்களைப் போற்றி வணங்கி அவர்களின் நல்வாழ்வுடன் கூடிய சிறந்த உலகத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கவும், கொண்டாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவ்வருட முதியோர் தினத்தின் தொனிப்பொருள் ‘கண்ணியத்துடன் முதுமை: உலக வாழ் முதியவர்களின் பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தல் என்பதாகும். ஒவ்வாருவரும் தம் பெற்றோர்களுக்கான அங்கீகாரம், கௌரவம், உரிமை என்பவற்றை வழங்கி சமத்துவமாகவும், நீதியாகவும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் தேசத்தை கட்டியெழுப்புவதே நோக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் சம உரிமைகளைப் பெறுவதற்கு உரிமையுள்ளதைப் போன்று முதியவர்களுக்கும் உரிமைகளைப் பெற உரிமையுண்டு.
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்களுக்கு காலவோட்டத்தில் முதுமையும் சேர்வதால் அவர்களது இறுதிக்காலமும் சுமையாகி விடுகிறது. தம் பிள்ளையின் கல்வி, தொழில், எதிர்காலம் பற்றிப் பேசும் ஒவ்வொரு பெற்றோர்களும் ஏன் தங்களுடைய பெற்றோர்கள் பற்றி சிந்திக்க மறந்து விட்டனர்? இப்போது சுமையாகி விட்டதாக தட்டிக்கழிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவர்களும், தமது இளமைக் காலத்தில் தம் பிள்ளைகளை சுமையென்று நினைத்திருந்தால் இப்போது இவர்களது நிலைமை ஏது? ஏன் முதியோர் இல்லங்கள் அதிகரித்து விட்டன? சமூக மாற்றத்தையும், நாட்டு விடுதலை பற்றிப் பேசுபவர்களில் எத்தனை பேர் தமது பெற்றோரை தம்மோடு வைத்து பராமரித்து வருகின்றனர்.
முதியோர்கள் ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்கள் தங்கள் வாழ்நாளில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள். அவர்களிடம் இருந்து நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். அவர்களின் அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும் விளக்காகும். அவர்களின் ஞானம் நம்மை சரியான பாதைக்கு வழிகாட்டும். அனுபவங்களின் களஞ்சியமான முதியோர்கள் தங்கள் வாழ்நாளில் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் அனுபவங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஞானத்தின் ஆதாரமான அவர்களது அனுபவங்களின் அடிப்படையில் நாம் பல ஞானங்களைப் பெறுகின்றோம். அவர்களின் ஞானம் நம்மை சரியான முடிவுகளை எடுக்க உதவும். கலாச்சாரத்தின் பாதுகாவலரான முதியோர்கள் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாத்து வருகின்றனர். அவர்களின் கதைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் நம்முடைய அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றன.
ஐ.நா சபையின் அறிக்கையின்படி, உலகளவில், 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக 72 கோடி முதியவர்கள் இருந்துள்ளனர். அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் ஐ.நா சபையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. முதியோர்களை மதிப்பதும், உதவுவதும் நம்முடைய கடமையாகும். அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் மரியாதை அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். இயந்திரமயமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் அவர்களுக்கென்று நேரத்தை செலவிட்டு அவர்களுடைய கதைகளை கேளுங்கள்;; அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;; தனித்துவத்தையும், அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்துங்கள்.
முதியோர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமின்றி, அவர்களது கருத்துக்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உறவுகள் அருகில் இருக்கும் போது அவ்வுறவின் அருமையும், முக்கியத்துவமும் உணரப்படுவதில்லை; அவ்வாறு உணரும் போது அவ்வுறவுகள் அருகில் இருப்பதில்லை என்பதே உலக நியதி. பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, சோறூட்டி, தாலாட்டி, கல்வியறிவூட்டி ஒரு நண்பனாக, ஒரு ஆசானாக, ஒரு வழிகாட்டியாக வாழ்கின்றனர். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து பணத்தையும் செலவிட்டு, இளமையையும் தொலைத்து, சொத்துக்களை இழந்து, துன்பங்களை வென்று, தனக்கென சேமிப்பு எதுவுமின்றி வாழும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பரிசு முதியோர் இல்லமும், அநாதை என்ற முத்திரையுமே; இது சரியா? இதே நிலைமைதான் நாளை ஒவ்வொருவருக்கும் என்பதை மறுக்க முடியாது. எனவே நாம் அனைவரும் உண்மை தெளிந்து முதியோர்களின் உணர்வுகளை மதித்து, கௌரவித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.
கந்தசாமி அபிலாஷ் (B.Ed (Hons), M.Ed, HND in English, NC in English)