இந்தியாவின் பெங்களூரு கோரமங்களா உள்ளக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
14 நாடுகள் பங்குபற்றிய இந்த சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத அணிகளாக இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையும் சிங்கப்பூரும் விளையாடின.
மேலதிக நேரம்வரை நீடித்த அப் போட்டியில் 67 – 64 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் வெற்றிபெற்று நான்காவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை சூடியது.
சிங்கப்பூர் 10 வருடங்களின் பின்னர் ஆசிய சம்பியானகியது.
போட்டியின் ஆரம்பத்திலும் பின்னர் நான்காவது பகுதியிலும் இறுதியாக மேலதிக நேரத்தின் இரண்டாவது பகுதியிலும் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அத்துடன் விவேகத்திலும் பார்க்க வேகமாக விளையாடியது இலங்கையின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.
மத்திய கள வீராங்கனை கயஞ்சலி அமரவன்ச, அணித் தலைவியும் எதிர்த்தாடும் பக்கநிலை வீராங்கனையுமான துலங்கி வன்னித்திலக்க, எதிர்த்தாடும் கோல்நிலை வீராங்கனை ரஷ்மி பெரேரா, தடுத்தாடும் கோல்நிலை வீராங்கனை மல்மி ஹெட்டிஆராச்சி ஆகியோர் இழைத்த தவறுகளே இலங்கையின் வீழ்ச்சிக்கு காணரமாக அமைந்தது.
போட்டியின் முதலாவது 15 நிமிட ஆட்ட நேர பகுதியில் பந்துபரிமாற்றங்களில் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளைப் பயன்படுத்தி சிங்கப்பூர் இரட்டை கோல் வாய்ப்புகள் மூலம் பலன் அடைந்தது.
அப் பகுதி ஆட்ட நேர முடிவில் 5 கோலகள் வித்தியாசத்தில் (12 – 17) இலங்கை பின்னிலையில் இருந்தது.
எவ்வாறாயினும் இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் விவேகத்துடன் விளையாடிய இலங்கை அப் பகுதியை 15 – 11 என தனதாக்கியது.
எனினும் இடைவேளையின்போது சிங்கப்பூர் 28 – 27 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இலங்கை அப் பகுதியையும் 15 – 11 என தனதாக்கி, 42 – 39 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், நான்காவது ஆட்டநேர பகுதியில் இலங்கை வீராங்கனைகள் தவறுகள் இழைத்ததால் அப் பகுதியை சிங்கப்பூர் 13 – 10 என தனதாக்கி, ஒட்டுமொத்த கோல் நிலையை 52 – 52 என சமப்படுத்தியது.
முழு நேரத்தின்போது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
14 நிமிடங்களைக் கொண்ட மேலதிக நேரத்தின் முதல் 7 நிமிடங்கள் நிறைவில் இரண்டு அணிகளும் தலா 7 கோல்களைப் போட கோல் நிலை மீண்டும் சமநிலையில் (59 – 59) இருந்தது.
இரண்டாவது 7 நிமிட மேலதிக நேரம் ஆரம்பித்த சில செக்கன்களில் மல்மி ஹெட்டிஆராச்சியின் தவறு காரணமாக சிங்கப்பூர் இரட்டை கோல் வாய்ப்பை பயன்படுத்தி 61 – 59 என முன்னிலை அடைந்தது.
போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது ரஷ்மி பெரேரா இழைத்த தவறால் சிங்கப்பூருக்கு மற்றொரு இரட்டை வாய்ப்பு கிடைத்ததுடன் அதுவே அவ்வணி ஆசிய சாம்பியன் ஆவதற்கான திருப்புமுனையாக அமைந்தது.
இறுதியில் அப் பகுதியை 8 – 4 என தனதாக்கிய சிங்கப்பூர் 67 – 64 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய சம்பியனானது.