சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அநுர அரசாங்கம் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது. வடக்கு கிழக்கில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரு சிங்களப் பெரும்பான்மையினக் கட்சி வெற்றியைப் பெற்றிருப்பது ஒரு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈழத் தமிழ் மக்கள் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது உண்மையானது. அதற்கான சமிக்ஞையை அண்மைய காலத்தில் ஆளும் சிறிலங்கா அரசின் முக்கியஸ்தர் ஒருவர் வெளிப்படுத்தி வருகின்றார்.
வடக்கு கிழக்கு மக்கள் ஏன் இனவாதத் தரப்புக்கு வாக்களித்தார்கள்? என்று சிங்கள எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி கவலையோடு கேட்டிருந்தார். பெரும்பாலான சிங்கள படைப்பாளிகளைப் பொறுத்தவரை கோட்டாபய அலையும் தற்போதைய அலையும் ஒன்றுதான்.
ஜனாதிபதி தேர்தல்
சிங்களப் படைப்பாளிகளின் இந்த பார்வை மிக முக்கியமானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அண்மையில் கொழும்பில் ஒரு இலக்கிய நிகழ்வுக்காகச் சென்றிருந்தவேளையிலும் “இனிவரும் காலத்தில் தமிழ் படைப்பாளிகள்மீதான அரசின் ஒடுக்குமுறை நீளுமா?” என்று கேட்டபோதும் படைப்பாளிகள் மௌனமாகவே இருந்தார்கள். புதிய அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை மிக விமர்சனமாக சிங்கள மக்கள் பார்ப்பதாகவும் அது மிகவும் தவறானது என்றும் சிங்களப் படைப்பாளிகள் கூறினார்கள்.
ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த தமிழர் பகுதியில் பெரும்பான்மையான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்திற்கு வீழ்ச்சியான நிலையை ஏற்படுத்தி உள்ளதா என்ற பேச்சை சிலர் உருவாக்க முனைகின்றனர். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்திற்கு ஒருபோதும் வீழ்ச்சி ஏற்படாது.
ஆனால் தமிழ் கட்சிகளின் மிக மோசமான அணுகுமுறைகளால் தமிழ் அரசியல் சூழலின் சீரழிவால் கோட்டாபயவுக்கு நிகரான ரில்வின் சில்வா (Tilvin Silva) போன்றவர்களின் பேரினவாத பேச்சுக்களை எதிர்கொள்ளத் தலைப்பட்டிருக்கிறோம். இதற்கு தமிழ் கட்சிகளே பொறுப்பெடுக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் எனச்சொல்லப்பட்டவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத அரசியல் சூழலில் சிறிலங்கா அரசு மாத்திரம் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன.
விடுதலைப் புலிகள் இல்லை என்றவுடன் தமிழ் தலைமைகளையும் திருத்த முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழ் தேசத்திற்கும் தமிழர்களின் உரிமைக்கும் எதிராக செயற்பட்டபடி விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி மக்களை ஏமாற்ற முனைகின்ற அரசியல் சூழலைத்தான் அண்மைய காலத்தில் பார்த்து வருகின்றோம்.
ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியும் மற்றவரை வீழ்த்துவதில் காட்டிய அக்கறையை செயலூக்கத்தை தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்கும் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மையான நிலை.
விடுதலைப் புலிகள் இல்லாத 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பு இரண்டாக உடைந்தது. இப்போது பல துண்டுகளாக அந்த உடைவுகள் பெருகிவிட்டன.
இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த அணிகளுடன் இன்னும் பல அணிகளும் சுயேட்சைகளும் களமிறங்கி எம்மை கூறு போட வந்து சூழும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப் போல பேரினவாதக் கட்சிகள் இந்த உடைவுகளைப் பயன்படுத்தி தமது நலன்களைச் சாதித்துக்கொள்கின்றன.
மூன்று ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. 2010 தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தரப்பும் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் இவ்வாறு ஆளும் அரசுக்கு ஆசனங்கள் கிடைப்பது ஆச்சரியமல்ல.
தமிழ் தேசிய மறுப்பாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் தற்போதைய சூழலைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதைப் கவனித்தால் இந்த அரசியலின் ஆபத்தை இன்னமும் உணரலாம்.
அத்துடன் ரில்வின் சில்வா போன்றவர்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்ற இடங்களுக்கு தமது சாயங்களைப் பூசி தமது அர்த்தங்களைக் கற்பிக்க முற்படுகிறார்கள். வடக்கு கிழக்கில் இனவாதம் இல்லை என்று ரில்வின் சில்வா சொல்கிறார்.
வடக்கு கிழக்கில் இனவாதம் இல்லைதான். ஆனால் இனவிடுதலைக்கான போராட்டமும் கோரிக்கையும் வலுவாக இருக்கின்றது. இந்தத் தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு ரில்வின் சில்வா போன்றவர்கள் அதனை மறைத்து விட முனைகிறார்கள் என்ற ஆபத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரச்சினைகள் வெகுகாலத்தில் சரிசெய்யப்பட வேண்டும். அதற்கான பொறுப்பை ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் முன்னெடுக்க வேண்டும்.
இனப்படுகொலைக்கான நீதி
கடந்த காலத்தில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுதல், வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியைப் பெறுதல் என்பன முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
ஆனால் இம்முறை தனிப்பட்ட இருப்பு சார்ந்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளும் சேறுபூசல்களும் மக்களின் கவனத்தை திசைதிருப்பி மக்களை விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளன. இவைகளே தேர்தலில் பிரதிபலித்துள்ளன. இதற்கான பாதிப்புக்களையும் மக்கள்தான் எதிர்கொள்ளப் போகிறார்கள்.
கடந்த காலத்தில் கோட்டாபயவின் தரப்பில் போட்டியிட்ட சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கடும் பேரினவாதக் கருத்துக்களை வெளியிட்டவர். கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்த அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து ஈழ மக்களுக்கு எதிராக மிக மோசமாக கடந்த ஆட்சிகளில் பேசியிருந்தார்.
அவர் இம்முறை தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். ஆனால் அதற்கு கொஞ்சமும் குறைந்தவரல்ல ரில்வின் சில்வா. அநுர தரப்பை இயக்குகின்ற மூளையாக இருக்கும் ரில்வின் சில்வா போன்றவர்கள் இந்த ஆட்சியில் சரத் வீரசேகரவாக செயற்படுகிறார் என்பதை அண்மைய காலத்தில் பார்க்கிறோம்.
எனவே, கடந்த காலத்தில் ஜேவிபி தமிழர்களுக்குச் செய்த அநியாயங்களுக்கு விமோசனங்களைச் செய்கின்ற ஆட்சியாக இது அமையுமா? அல்லது காலம் காலமாக இலங்கை நகரும் பேரினவாத வழியில் நகருமா? என்பதை வரும் காலத்தில் தெளிவாக உணர்த்தி நிற்கும்.
தீபச்செல்வன்