பிரான்ஸின் சிறுபான்மை அரசாங்கம் கவிழ்ந்துவிடும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரதமர் மிஷெல் பானியே சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, வரவு – செலவுத்திட்ட மசோதாவை நிறைவேற்ற முயன்றதைத் தொடர்ந்து ஆட்சி கவிழும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவிருப்பதாகக் கூறியுள்ளன. அதற்கான வாக்கெடுப்பு நாளை (04 ) நடைபெறவுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்களைக கொண்டுவரபிரதமர் மிஷெல் பானியே முயன்றார். ஆனால், நாடாளுமன்றத்தில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்த அவர் முடிவெடுத்தார்.
அது நாட்டைப் பெரும் அரசியல் நெருக்கடியில் தள்ளிவிட்டதாக எதிர்த்தரப்பினர் குறை கூறுகின்றனர்.
ஆண்டின் நடுப்பகுதியில் அதிபர் மக்ரோன் (Macron) திடீர்த் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதனால் கடந்த சில மாதங்களாகவே பிரான்ஸ் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.