Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை பால் நிலை வேறுபாடுகள்பால் நிலை வேறுபாடுகள்

பால் நிலை வேறுபாடுகள்பால் நிலை வேறுபாடுகள்

2 minutes read

மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண்-பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. காலத்திற்குக் காலம் நோக்குகைகள் வித்தியாசப்பட்டாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு பேணப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுறைச் சமூகங்களில் காண முடிகிறது. இதற்கான காரணம் என்ன என நோக்குவது அறிவுபூர்வமானதாகும்.

ஒரு குழந்தை பிறந்து அது தான் பிறந்த சமூகத்திற்குரியதாக மாறுவது அவசியமானதாகும். அப்பிள்ளையை அச்சமூகத்திற்குரியதாக மாற்றுவது அதாவது சமூகமயமாக்குவது குடும்பத்தின் கடமையாகிறது. இவ்வாறான சமூகமயமாக்கல் செயற்பாட்டின் போதுதான் ஆண், பெண் நடிபங்குகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆண் நடிபங்குகள் என வரையறுத்து வழங்கப்படுபவை பெண் நடிபங்குகளாக வழங்கப்படுபவையோடு ஒப்பிடுகையில் உயர்வானவை எனக் கருதப்படுவதானது பெண்ணிலைவாதச் சிந்தனைக்கு வழிசமைத்துக் கொடுக்கிறது. ஆயினும், உலகில் எல்லாச் சமூகங்களிலும் இவ்வாறுதான் இடம்பெறுகிறது என்றும் கூறிவிட முடியாது.

இவ்வாறான சமூகமயமாக்கல் இயல்புகளிடையே பண்பாட்டுக்குப் பண்பாடு காணப்படும் வேறுபாடுகளை  Margaret Mead ன் ஆரம்பகால மானிடவியல் ஆய்வுகள் விளக்குகின்றன. நியூகினிப் பழங்குடியினரான Arapesh  மக்களின் சமூகமயமாக்கலில் ஆண் பெண் இருபாலாரும் மெல்லியல்புகளுடன் வளர்க்கப்படுகின்றனர்.

கூட்டுவாழ்வும் உதவும் பண்பும் இயல்பாய் வழங்கப்படுகின்றன. Mundugamore  மக்களிடையே ஆண்களும் பெண்களும் வல்லியல்புகளுடன் வளர்க்கப்படுகின்றார்கள். Tschambuli பண்பாட்டில் ஆண்களைவிட பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக, ஆண்களைவிடப் பொறுப்பும் முகாமைத்துவத் திறனும் கொண்டவர்களாகச் சமூகமயப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சமூகமயமாக்கலின் ஊடாகவே ஆண்-பெண் பால்நிலை வேறுபாடுகள் புகுத்தப்படுகின்றன.

பால்நிலை பாத்திரவகைப்பாட்டுக்கான ஏற்பாடுகள் ஒரு பிள்ளை பிறந்தது முதற்கொண்டு நடைபெறுகின்றன. ஆண் உறுதியானவன், பெண் மென்மையானவள் என்ற எண்ணங்கள் பதியவைக்கப்படுகின்றன. ஆண் குழந்தையின் விளையாட்டுப் பொருட்களாக இராணுவ பொம்மைகள், வாகனங்களும் பெண் குழந்தைகளுக்குப் பாவைப் பிள்ளைகளும், சமையல் விளையாட்டுப் பாத்திரங்களும் வழங்கப்பட்டு பால்நிலை வேறுபாடுகள் தெளிவாக வரையறுத்து வழங்கப்படுகின்றன.மேலும் மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவதிலும் வேறுபாடுகள் வரையறுக்கப்படுகின்றன.

ஆண் பிள்ளை அழக்கூடாது, கோபம் ஆணுக்குரியது என்றும் பெண்பிள்ளை பொறுமையாகவும் அதிகம் சிரிக்காமலும் இருக்க வேண்டும் என்றும் அழுகை பெண்களுக்குரியதென்றும் கருத்தேற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை அப்பிள்ளையின் வாழ்நாள் பூராகவும் தொடர்ந்துவிடுகிறது.

குடும்பத்தில் தனக்கு மூத்தவரோ, இளையவரோ ஆண்களுக்குப் பணிந்து நடக்கும் பண்பை அக்குழந்தை இயல்பாகவே தன்னுள் பெற்றுக்கொள்கிறது. இதுவே பெண் அடக்குமுறையாக உருவெடுக்கிறது. பெண்ணிலைவாதம் என்ற கருத்துநிலையில் தோற்றத்திற்கு இதுவே முக்கிய அடிப்படைக் காரணமாகும்.

இத்தகைய மரபு ரீதியாக சமூகமயமாக்கல் அவர்களது வளர்ந்தோர் பருவத்தில் மீள்வலியுறுத்தப்படுகின்றது. பெண்கள் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தமது இயல்பாக்கிக் கொள்கின்றனர். பாடசாலைக் காலத்தில் பொறியியல் துறை ஆண்களுக்குத்தான் சரி பெண் பிள்ளைக்கு ஆசிரியர் தொழில் தான் பொருத்தம் என்ற கருத்து ஊட்டப்படுகிறது.

திருமணமானபின் பெண்ணின் உரிமைகள் கணவனின் கைக்கு மாறுகிறது. கணவனின் சொற்களுக்குக் கட்டுப்படாவிடின் சமூகம் தன்னை மதிக்காது என்பதால் என்பதால் ஒரு பெண் அதற்கும் கட்டுப்பட்டு வாழ்கிறாள். இவ்விடயத்தில் எல்லா ஆண்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது சரியாகாது. எந்தவொரு விதிக்கும் விதிவிலக்கு உண்டு என்பது இதற்கும் பொருந்தும்.

பால்நிலை வேறுபாடுகளுக்கு ஆண் பெண் உயிரியல் நிலையும் காரணமா என்பது சிந்திக்கற்பாலது. ஆண் -பெண் என இரு இனம் வரும் போதே அங்கு ஏதோ வித்தியாசம் இருக்கும் என்பது தெளிவு.

அண்மைக்கால ஆய்வொன்றில் பெண்களைவிட ஆண்கள் கணிதவியல் நுண்ணறிவு கூடியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதற்காகப் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதுதான் பிழையானது. எல்லா ஆண்களும் நுண்ணறிவு கூடியவர்களாக இருந்துவிடுவதில்லை. கணிதத்துறையில் ஆண்களைவிடச் சிறந்து விளங்கும் மாணவிகளையும் நாம் சாதாரணமாகக் காண்கின்றோம்.

உயிரியல் ரீதியில் ஆண்கள் நுண்ணறிவு கூடியவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் என ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், பெண்களும் பிள்ளைப்பேறு எனும் ஆண்களால் முடியாத காரியத்தைச் செய்கிறார்கள்தானே! இவ்வாறு பார்த்தால் உயிரியல் ரீதியில் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே.

ஏனெனில், ஆண்களால் முடியாத விடயத்தைப் பெண்களுக்கும் பெண்களால் முடியாத விடயத்தை ஆண்களுக்கும் கொடுத்துஇயற்கை மனித இனத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயிரியல் ரீதியில் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கற்பிதம் நமது சமூகம் ஏற்படுத்திக் கொண்டதேயன்றி வேறில்லை என்பதும் தெளிவாகின்றது.நமது சமூகமயமாக்கல் செயன்முறையும் இதற்கு ஏற்றாற்போல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

பால்ரீதியான பாகுபாட்டுச் சிந்தனையை ஒழிக்க வேண்டுமாயின் அதற்கான முயற்சி ஒரு பிள்ளை பிறந்தது முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் சமூகமயமாக்கல் செயன்முறையின் அமைப்பொழுங்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் படைப்பால் ஒரே மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தைப் பிள்ளைகளில் ஊட்டிச் செயற்படுகையில் இவ்விலக்கை அடைவது இலகுவானதாகும். 21 ஆம் நூற்றாண்டிலும் ஆதிக்கக் கருத்தியலாகக் கொள்ளப்படும் பெண்ணிலைவாதம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமாயின், இவ்வாறு செய்யப்படுவது இன்றியமையாததாகின்றது.

–  ‘துயரி’ தென்கிழக்குப் பல்கலைக்கழக இதழ் -03, பெப்ரவரி-ஏப்ரல் 2003) –

 

 

 

நன்றி : சறியா ஹாமீம் | பெண்ணியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More