பால் நமது ஆரோக்கியத்திற்குச் செய்யும் நன்மை அளவிட முடியாதது. அதனால்தான் பால் நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் பாலைக் குடிக்கிறார்கள். பாலில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
பாலில் வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நமது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
அந்தவகையில், சிலர் மாட்டு பாலைக் குடிக்கின்றனர், இன்னும் சிலர் எருமை பால் மட்டும் தான் குடிப்பார்கள். இந்த இரண்டு பாலில் எது சிறந்தது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த இரண்டு பாலுக்கும் என்ன வித்தியாசம்? நமது ஆரோக்கியத்திற்கு எந்த பால் சிறந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
மாட்டு பால் vs எருமைப் பால் இடையே உள்ள வேறுபாடு
புள்ளிவிவரங்களின் படி, பெரும்பாலான மக்கள் மாட்டு பாலைத்தான் விரும்பி குடிக்கின்றனர். ஏனெனில், மாட்டு பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் இது எளிதில் ஜீரணமாகும். எருமைப் பால் அடர்த்தியாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதனால்தான் தேநீர், காபி போன்றவற்றில் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
எந்த பாலில் புரதம் அதிகம்?
மாட்டு பாலையும், எருமைப் பாலையும் குடிக்கப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த இரண்டு பாலுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. ஆவின் பாலிலும், எருமைப் பாலிலும் புரதம் உள்ளது. ஆனால் எருமைப் பாலில் தான் புரதச்சத்து அதிகம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாட்டு பாலில் நீர்ச்சத்து அதிகம். அதனால் அது நீர்த்ததாக இருக்கும்.
எருமைப் பால் கெட்டியாகவும், க்ரீமியாகவும் இருக்கும். மாட்டு பாலை விட எருமைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகம். எருமைப் பாலில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன. மாட்டு பாலில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. மாட்டு பால் வெளிர் மஞ்சள், வெள்ளை நிறத்தில் இருக்கும். எருமைப் பால் க்ரீம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
ஆரோக்கியத்திற்கு எந்த பால் சிறந்தது?
மாட்டு பாலிலும், எருமைப் பாலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகை பாலிலும் கால்சியம், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றின் அளவில் சிறிது வித்தியாசம் உள்ளது. 100 மி.லி மாட்டு பாலில் சுமார் 3.2 கிராம் புரதம் உள்ளது. எருமைப் பாலில் 3.6 கிராம் புரதம் உள்ளது.
மாட்டு பாலில் 4.4 கிராம் கொழுப்பு, 4.9 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 118 மி.கி கால்சியம் உள்ளன. எருமைப் பாலில் 6.6 கிராம் கொழுப்பு, 8.3 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 121 மி.கி கால்சியம் உள்ளன. இரண்டு வகை பாலிலும் லாக்டோஸ் உள்ளது. மாட்டு பாலில் 4.28 கிராம் லாக்டோஸ் இருந்தால், எருமைப் பாலில் 4.12 கிராம் லாக்டோஸ் உள்ளது.
எருமைப் பாலில் பொட்டாசியம், பீட்டா-லாக்டோகுளோபுலின் அதிக அளவில் உள்ளன. இவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மாட்டு பாலை விட எருமைப் பாலில் கொலஸ்ட்ரால் குறைவு. இந்த பால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நல்லது. மாட்டு பாலில் புரதம், வைட்டமின்கள், சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.