புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! – சிறீதரன் இரங்கல்

ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்! – சிறீதரன் இரங்கல்

2 minutes read

ஈழ மண்ணின் மூத்த படைப்பு இலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்தவருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் ஐயா மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் செய்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யோகேந்திரநாதனின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அகவை மூப்பையும் அதனால் அவர் உற்றிருந்த நோய் உபாதைகளையும் கடந்தும் தமிழ்த் தேசியப் பயணப் பாதைகளை தன் படைப்புகள் ஊடாக வெளிக்கொணர வேண்டும் என்ற பேரவாவில் எழுத்துலகில் இயங்கிக்கொண்டே இருந்த ஈழத்தின் புகழ்பூத்த பேராளுமையான அவர், ஈழவிடுதலைப் போர் குறித்த அனுபவங்களையும், ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த ஈழத்தின் அடையாள மனிதனாகவுமே இறுதி வரை இருந்தார்.

போராட்ட காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நா.யோகேந்திரநாதனின் ‘உயிர்த்தெழுகை’ நாடகம் ஈழ உணர்வாளர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை மேலுயர்த்தி, எமது மக்களின் உணர்வுகளில் நிறைந்த மனிதனாக அவரை மாற்றியிருந்தது.

இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்தை தன் இதயத்தே சுமந்த ஓர் பேனாமுனைப் போராளியாக விடுதலைப் போராட்ட காலத்தில் எத்தனை வீரியத்தோடு அரசியல், நாடக, வானொலித் துறை சார்ந்து இயங்கினாரோ, அதே வீரியத்தையும், விவேகத்தையும்  படைப்பு இலக்கியம் எனும் துறைக்குள் ஒருசேர இணைத்து, புனைவுகள் அற்ற போரியல் ஆவணங்களாக தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்த வண்ணமிருந்த
அவரின் எழுத்துலகப் பணி, ஒரு விடுதலைப் போராளியின் ஆத்ம தாகம் நிறைந்த காலப் பெரும் பணியாகவே இருந்தது.

நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் தொடர்களின் வெளியீட்டின் பின்னர் நோயுற்றிருந்த அவர் அதிலிருந்து ஓரளவு மீண்டெழுந்த பின்னர், உலகப் போரியலின் வரலாற்றுத் திருப்புமுனையான ‘குடாரப்புத் தரையிறக்கம்’ குறித்துப் பேசும் 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் வரலாற்று நாவலை எழுதி வெளியிட்ட நிறைவில் இருந்து நாம் இன்னும் மீளாத நிலையில் அவர் மறைந்தார் என்ற செய்தி மனத்துயரைத் தந்திருக்கின்றது.

ஒரு படைப்பாளன் தன் படைப்புகளின் வழி காலம் உள்ளவரை வாழ்வான் என்பது எத்துணை உண்மையோ, காலம் எம் மண்ணில் உற்பவித்த விடுதலைப் போராளி ஐயா யோகேந்திரநாதனும் தமிழ்த் தேசியத்தின் அழியா முகமாக என்றும் எம் நெஞ்சங்களில் நிறைந்தே இருப்பார்.

இலட்சியப் பற்றுறுதி மிக்க, எமது மண்ணின் முதுபெரும் ஆளுமை ‘மாமனிதர்’ யோகேந்திரநாதனுக்கு எமது புகழ் வணக்கம். அவரின் ஆத்மா அமைதி பெறவும், இழப்பின் வலி சுமந்திருக்கும் அவரது குடும்பத்தினர் இந்தத் துயரிலிருந்து மீளவும் எனது பிரார்த்தனைகளும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More