புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!  

யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!  

2 minutes read
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலவரையின்றி விரிவுரைகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

“அண்மையில் இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

அவரின் இராஜிநாமாவை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்து கலந்துரையாடும் வகையில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கலைப்பீடத்தில் இடம்பெற்றது.

மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப்  பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை குறித்து இந்தக் கூட்டத்திலே பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தண்டனைகளின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல. மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயற்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்:-

1. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜிநாமா செய்த கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலை  வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலைப் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.

2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிர்வாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிர்வாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும்.

4. இரண்டு மாணவர்கள் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையை  வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று கலைப்பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே, எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பிவைக்கப்பட்டது.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More