உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிப்பர்.
அவ்வாறிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் என்று தோன்கிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது.
அது விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினரின் கடமையாகும். அவை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுபவையல்ல.
விசாரணை முன்னெடுக்கும் திணைக்களங்கள் கூறினால் மாத்திரமே நாமும் அறிவோம். எனவே யார் எப்போது கைது செய்யப்படுவார் என்பது எமக்குத் தெரியாது.
அவ்வாறிருகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார் என்பதும் எமக்கு தெரியாது.
ஒருவேளை அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அனைத்தும் தெரிந்திருக்கலாம். அதனால்தான் யார் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே கூறுகின்றார் என்றார்