தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள்.
தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா?
தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.
ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள்.
எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது.
விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம்,மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.