தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக சட்ட ஆட்சிக்கு எதிராக, தனியார் காணியில் ஆக்கிரமிப்பு ரீதியாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையைப் பாதுகாப்பதில் பௌத்த சாசன அமைச்சரும் பொலிஸாரும் படையினரும் அக்கறையாக உள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி விகாரை தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உண்மையில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் காணியில் கோவிலோ தேவாலயமோ பள்ளிவாசலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் கடைசி வரை அனுமதிக்காது. அவ்வாறு தவறுதலாக அமைத்திருந்தால், உடனடியாக இந்த அரசாங்கம் உடைத்து அழித்து விட்டிருக்கும். இதனை சட்ட ஆட்சி என்று கூறுவர்.
அந்த சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. அதே போன்றுதான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் நடைபெறுகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். இதுதான் கூட்டுப் பொறுப்புக் கொள்கை என்று தேசிய மக்கள் சக்தி கற்பிக்கிறது.
வடக்கு, கிழக்கு காணி அபகரிப்புகளைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு வடக்கு, கிழக்கு மக்கள் அங்கிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.
வடக்கில் தமிழ் அரசுக் கட்சியினர் வேட்பாளர் தெரிவில் விட்ட தவறுதான் அங்கு தேசிய மக்கள் சக்தியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணமாகும். இல்லாவிட்டால் அந்த ஆசனங்கள் தமிழ் அரசுக் கட்சிக்கு உரியதாக அமைந்திருக்கும்.
இந்த நிலையில், வட பகுதித் தமிழ் மக்கள் உணர்ந்திருப்பார்கள். ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் தமிழர்களுக்கு எதிரான எதனையும் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளது.
தையிட்டி விகாரை, வெடுக்குநாறி மலை, மயிலத்தமடு மாதவனை, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் போன்ற விடயங்களையும் தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தட்டிக்கேட்க முடியாமல் உள்ளதை அறிய முடிகின்றது.
எனவே தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதன் மூலமாகவே தமிழர்களின் பிரச்சினைகளை தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும். இதனைத் தமிழ் மக்கள் உணரும் சந்தர்ப்பத்தை தையிட்டி விகாரை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.