“பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசிடமிருந்து இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும், ‘எம்பவர் பெண்கள்’ நிகழ்வு யாழ்ப்பானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷும் இதில் பங்கேற்றார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர், “கனேடிய அரசு வூசூ அமைப்பின் ஊடாக கடந்த காலத்தில் குறிப்பாக இறுதிக்கட்டப் போர் ஆரம்பித்த தருணங்களில் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தது.
வடக்கிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தநிலையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுவூட்டுவது சிறப்பானது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதில் அரசு அக்கறையாக உள்ளது. உலக வங்கியினர், ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்பினர் எனப் பல தரப்பட்டவர்கள் அண்மையில் எம்மை வந்து சந்தித்திருந்தனர். எமது தேவைப்பாடுகளைக் கூறியிருக்கின்றோம். எங்களுடைய ஏற்றுமதியை அதிகரிப்பதன் ஊடாக வலுவூட்டுவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். அதற்கான உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.