கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப், நேற்று புதன்கிழமை (05) உரையாற்றினார்.
“அமெரிக்க கனவு நிறுத்த முடியாதது” எனும் கருப்பொருளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் என 7 முக்கிய விடயங்களை முன்வைத்து டிரம்ப்பின் உரை அமைந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், டிரம்பின் இந்த உரையே மிக நீளதாக அமைந்திருந்தது. அதாவது, 99 நிமிடங்கள் அவர் நேற்று உரையாற்றினார். இதில் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தை டிரம்ப் விவரித்தார்.
அத்துடன், அமெரிக்க கோடிஸ்வரர் எலான் மாஸ்க்கிற்கும் உரையின் ஆரம்பத்திலேயே அவர் நன்றி தெரிவித்தார்.
மீண்டும் ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்ற 6 வாரத்தில் வேகமாக, அயராது உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த 4 முதல் 8 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த 6 வாரங்களில் நிறையச் சாதித்ததாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் உற்சாகம், பெருமிதம், நம்பிக்கை ஆகியன மீண்டும் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வரி விதிப்பு விவகாரங்கள்
புதிய வரி விதிப்பில் தாம் உறுதியாய் இருப்பதாக இதன்போது தெரிவித்த டிரம்ப், அது கொஞ்சம் தொந்தரவைத் தரும் என்றார்.
சில நாடுகள் பல தசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் இறக்குமதி வரியை விதிக்கின்றன. அந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கின்றன என தெரியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக வரியை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் வரி வசூலிக்கிறது. இந்த முறை அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரேன் விவகாரம்
பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடமிருந்து கடிதம் கிடைத்திருப்பதாக டிரம்ப் தனது உரையில் கூறினார்.
மேலும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா அனைத்து இராணுவ விநியோகங்களையும் நிறுத்திய, அடுத்த நாள் யுக்ரேன் ஜனாதிபதி அமைத்திக்கான கரங்களை நீட்டினார் என்றும் அவர் தெரிவித்தார்.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க விருப்பம்
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் விருப்பம் குறித்துப் பேசிய டிரம்ப், அது எந்த வகையிலாவது நிறைவேற்றப்படும் என்றார். டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி கிறீன்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.