உக்ரைன் மற்றும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாட்டை எட்ட உதவுவதில் இங்கிலாந்து நெருக்கமாக ஈடுபட்டுள்ளது என்று இங்கிலாந்து அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்யாவை ஒப்புக்கொள்ளும்படி அமெரிக்காதான் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவையும் உக்ரைனையும் ஒன்றுக்கொன்று நல்வழிப்படுத்த சேர் கீர் ஸ்டார்மர் தலைமையில் கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாராட்டிய ஸ்டாமர், உக்ரைனில் அமைதிக்கான முக்கியமான தருணம் என்று கூறி உள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் சந்திப்புக்கு பின்னர் ட்ரம்ப் நிர்வாகம் திடீரென நிறுத்திய இராணுவ உதவியை உக்ரைனுக்கு மீண்டும் வழங்குவதாகவும், கெய்வ் உடனான உளவுத்துறைப் பகிர்வை மீண்டும் தொடங்குவதாகவும் கூறி உள்ளது.
கடந்த வாரம் பிரதம மந்திரியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், அவரது அமெரிக்கப் பிரதிநிதி மைக் வால்ட்ஸ் மற்றும் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுடன் இணைந்து போர்நிறுத்தத்திற்கான திட்டத்தையும், அதைத் தொடரக்கூடிய நடவடிக்கைகளையும் வடிவமைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.