அமெரிக்க ஜனாதிபதியாக டோனல்ட் டிரம்ப் பதவியேற்ற பிற்பாடு, புதிய வரித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
இதனால், மெக்சிகோ மற்றும் கனடா ஆகியன பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப் போவதாக டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தது. அதற்குப் பதிலடி உண்டு என்கிறது அமெரிக்கா.
அதேவேளை, உலோகப் பொருள்கள் மீது 25 சதவீதம் வரியை கனடா அறிவித்திருக்கிறது. கணினி மற்றும் விளையாட்டுப் பொருள்கள் உட்பட வரி விதிக்கப்படும் பொருள்களின் மொத்த மதிப்பு 20 பில்லியன் டொலர் ஆகும்.
கனடாவின் இந்த வரித் திட்டம், இன்று (13) முதல் நடைமுறைக்கு வருகின்றது. அமெரிக்காவுக்கு மிக அதிகமாக உருக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக கனடா உள்ளது.
கனடா நாட்டின் அடுத்த பிரதமராகும் மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என்று கூறியுள்ளதுடன், வர்த்தக மோதலைத் தவிர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.