அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் திடீர் சூறாவளி ஏற்பட்டுள்ளது. சூறாவளி பாதிப்புக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மிசவுரி உள்ளது. சூறாவளி காரணமாக அங்கு 12 பேர் பலியாகியுள்ளனர். அர்கான்சாஸ் மாகாணத்தில் மூவர் பலியாகியுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் அமரில்லோ பகுதியில் புழுதி புயலின்போது, ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
8 கவுன்டி பகுதிகளை சேர்ந்த 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அத்துடன், கன்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்களும் இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளன.
பல்வேறு மாகாணங்களில் பாடசாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மின்சா விநியோகம் தடைப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் லொறிகள் உள்ளிட்ட வாகனங்கள் வீதிகளில் கவிழ்ந்துள்ளன.
மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகளும் இடிந்து விழுந்தன. சுவர்கள் மீது மக்கள் நடந்து செல்லும் அளவுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சூறாவளி காரணமாக அமெரிக்கா முழுவதும் 100க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் 689 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலம் தீக்கிரையாகியுள்ளது.
சூறாவளி, காட்டுத்தீ மற்றும் புழுதி புயல் உள்ளிட்ட இந்த திடீர் வானிலை பாதிப்புகளால் 10 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.