ஜெண்டில் வுமன் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : கோமளா ஹரி பிக்சர்ஸ் & ஒன் ட்ராப் ஓஸன் பிக்சர்ஸ்
நடிகர்கள் : லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லொஸ்லியா, ராஜீவ் காந்தி, வைர பாலன், தாரணி, சுதேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : ஜோசுவா சேதுராமன்
மதிப்பீடு : 2.5 / 5
தமிழ் சினிமாவில் இது திரில்லர்களின் காலம் போலிருக்கிறது. வாராவாரம் திரில்லர் ஜேனரிலான திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ‘ஜென்டில்வுமன்’ எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அரவிந்திற்கும், தென் தமிழகத்தில் பெற்றோர்கள் இல்லாத பூரணிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இவர்கள் திருமணத்திற்கு பிறகு சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் இல்வாழ்க்கையை தொடங்குகிறார்கள். தொடக்கத்தில் காதலுடனும்… எதிர்பார்ப்புடனும்… கணவன் -மனைவியாக தம்பதிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துகிறார்கள்.
இந்தத் தருணத்தில் மனைவியின் தங்கை போன்ற உறவினர் ஒருவர் சொந்த விடயம் காரணமாக இவர்களது இல்லத்தில் தங்குகிறார்.
அந்த நேரத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்பவத்தில் அரவிந்த் மயக்கமடைகிறார். அவர் இறந்துவிட்டாரோ..! எனக் கருதி அச்சத்தில் இருக்கும்போது அவருடைய கைபேசி ஒலிக்கிறது. கைபேசியை அவதானிக்கும் மனைவி பூரணி.. தன் கணவர் தனக்கு துரோகம் செய்திருப்பதை உணர்ந்து ஆத்திரமடைகிறார்.
அந்தத் தருணத்தில் மயக்கத்தில் இருந்த ஹரிகிருஷ்ணன் எழ- தன் கணவனை கொலை செய்கிறாள் பூரணி. இறந்த கணவனை குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைத்து… தன் இயல்பான நாளாந்த வாழ்க்கையை தொடங்குகிறார்.
இந்த குற்ற சம்பவத்திற்கு சாட்சியாக திகழும் தன் தங்கையிடம் இது தொடர்பாக யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறாள்.
ஆனால் பிரச்சனை அரவிந்தின் முன்னாள் காதலியான அண்ணா மூலம் ஏற்படுகிறது. அன்னா( லொஸ்லியா ) தன் காதலன் அரவிந்தை காணவில்லை என காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.
காவல்துறை விசாரணை தொடங்குகிறது. விசாரணையில் பூரணி சிக்கினாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பு குறையாமல் விவரித்திருக்கும் படம் தான் ஜென்டில்வுமன்.
கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை லிஜோ மோல் ஜோஸ் – கதாபாத்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் நன்கு உணர்ந்து தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
பெண்களை பாலியல் தேவைகளுக்கான பண்டமாக கருதும் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஹரி கிருஷ்ணன் நன்றாக நடித்திருக்கிறார்.
ஆண்கள் தவறானவர்கள் என்றாலும்.. சுயநலமிக்கவர்கள் என்றாலும்.. நேசத்திற்குரியவர்கள் என்ற சமரசமான அணுகுமுறையுடன் வாழும் அன்னா கதாபாத்திரத்தில் நடிகை லொஸ்லியா தன்னால் முடிந்த அளவு அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்க முயற்சித்திருக்கிறார்.
விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி – காவலர் – காவல்துறை உயர் அதிகாரி – ஆகியோர்களின் பங்களிப்பு படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.
உரையாடல்கள் கவனம் பெறுகின்றன. என்றாலும் அவை கதாபாத்திரத்தின் பேச்சு மொழியாக இல்லாமல் வசனகர்த்தாவின் இலக்கியத் தரமாக அமைந்திருப்பது துருத்தல்.
உண்மையாக நடைப்பெற்ற குற்ற சம்பவம் ஒன்றினை தழுவி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும்.. படைப்பு மரபின் அடிப்படையில் குற்றவாளிக்கு சட்டபூர்வமான தண்டனை கிடைக்காமல் .. நியாயப்படுத்தி இருப்பது தவறான முன்னுதாரணத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தக்கூடும்.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால்.. அவர்களுக்கு பெண்களே மரண தண்டனையை வழங்கலாம் என இயக்குநர் வலியுறுத்தி இருப்பது.. தற்போதைய சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும்.. சட்டம் மற்றும் தர்மபடி தவறு என்பதனை உணர்த்தி இருக்கலாம்.
அடுக்குமாடி வளாகம்- நடுத்தர குடும்பத்தின் உள்ளரங்கு – என கதை நிகழும் இடம்.. குறைவாக இருந்தாலும் அதனை வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு காட்சி மொழியாக படைப்பை நேர்த்தியாக வழங்கிய ஒளிப்பதிவாளரை பாராட்டலாம். இவருக்கு இசை மூலம் பக்க பலமாக விளங்கிய இசையமைப்பாளரையும் தாராளமாக பாராட்டலாம்.
ஜென்டில்வுமன் – புத்தி இல்லாத ஆத்திரக்காரி