செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளிநாட்டுப் பொறிமுறைக்கு அநுர அரசு அஞ்சுவது ஏன்? – கஜேந்திரகுமார் கேள்வி

வெளிநாட்டுப் பொறிமுறைக்கு அநுர அரசு அஞ்சுவது ஏன்? – கஜேந்திரகுமார் கேள்வி

3 minutes read

“நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த  நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவத் தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத் திட்டத்தின்  வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

“இன மோதல்கள்  தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது கடந்த காலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பல பொய்களும் பரப்பப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கம் வருவதற்கு முன்னர் இந்த அமைச்சு இவ்வாறுதான் இருந்தது. தமிழ் மக்கள் உரிமைகளைக் கோரும் போது அது தொடர்பான போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இந்த அமைச்சின் ஊடாகவே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி  தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன்  பின்னர் அந்த நடவடிக்கைகளை மாற்றியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன. இன மோதல்கள் தொடர்பாக இதன் அணுகுமுறை என்ன?

எவ்வாறு வெளியுறவுக் கொள்கைகளை பேணப் போகின்றது  என்ற கேள்விகள் எழுகின்றன. அத்துடன் தமிழ் மக்கள் மீதான கரிசனை தொடர்பில் சர்வதேச மத்தியில் எழும் விடயங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்ற போகிறது என்பதனையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகரால் 2015 ஆம் ஆண்டில் கூற்றொன்று வெளியிடப்பட்டது. அது மிகவும் முக்கியமானது. இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நடைபெற்ற விடயங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிப்பை நான் வரவேற்கின்றேன்.

ஆனால் இலங்கையில் குற்றவியல் சட்ட நடவடிக்கை மற்றும் இவ்வாறான மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வலுவான கட்டமைப்பொன்று இல்லை என்றும் இலங்கையில் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான நம்பகமான சட்டமில்லை என்றும் குறிப்பிடப்பபட்டுள்ளது.

அத்துடன் அரச பாதுகாப்பு மற்றும் நீதித்துறை திரிபுப்படுத்தப்பட்ட நிலையில்  உள்ளது என்றும்,  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அர்ப்பணிப்புகள் தொடர்பிலும் பல கேள்விகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனாலேயே கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்றும், இதில் சர்வதேச நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் விசாரணைகளில் பங்கெடுத்து மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையில் கொல்லப்பட்டவர்களுக்கு இந்த கலப்பு பொறிமுறை கட்டாயம் தேவைப்படுவதாகவும் நிலைமாறுகால நீதி வழங்கல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் அவரால் கூறப்பட்டுள்ளது.

அந்த  அறிக்கையின் பின்னர் 2016ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்த போதும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அதில் பின்வாங்கி அப்போதைய  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடாக அந்த தீர்மானத்தை எதிர்தார்.

இதன்போது சர்வதேச தலையீட்டை தடுக்க உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் உள்நாட்டுபொறிமுறை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்‌ஷ, மஹிந்த  ராஜபக்‌ஷ ஆகியோரிடம் இருந்து இவ்வாறான பொறிமுறையை எதிர்பார்த்திருக்க முடியாது. என்றாலும் ரணில் விக்கிரமசிங்க இணை அனுசரணை வழங்க முன்வந்து பின்னர் அதில் இருந்து பின்வாங்கியிருந்தார்.

இந்த நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின், என்ன நடந்தது என்று ஆராய வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். அது உள்நாட்டு பொறிமுறையாக இருக்க முடியாது.

சகலவற்றையும் உள்ளடக்கிய பொறிமுறையும், விசாரணை செயன்முறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே குறைந்தப்பட்ட தகுதியாக இருக்கின்றது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைளில் இருந்து விடுபட்டுவிட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த அரசாங்கம் அதனை விடவில்லை என்பதே எனது கருத்தாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்‌ஷ காலத்தில்  மக்கள் விடுதலை முன்னணி இராணுவத் தீர்வை காண தீவிரமாக ஆதரித்தது. உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்று பார்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையின் தன்மையை பார்க்கும் போது உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது. கடந்த காலங்களில் இனவாத அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால்  கடந்த 77 வருடங்களாக அரசாங்கங்கள் முன்னெடுத்துச் சென்றவற்றை கைவிட வேண்டும்.

நீங்கள் ஏன் வெளிநாட்டு பொறிமுறைக்கு பயப்பட வேண்டும். முதலில் உண்மையை கண்டறிய வேண்டும். நல்லிணக்கத்தை கொண்டுவர நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  ஆகவே கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த போக்கினை தற்போதைய அரசாங்கம் தொடரக் கூடாது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More