இலங்கை உட்பட ஆறு நாடுகளின் மாஸ்டர்ஸ் அணிகள் (முதுநிலை வீரர்கள்) பங்குபற்றிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பினானது.
ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ப்றயன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பியனானது.
சம்பியனான இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு கோடி இந்திய ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசு கிடைத்தது.
இந்த சுற்றுப் போட்டியில் அதிக பவுண்டறிகள் (38) அடித்த இலங்கை மாஸ்டர்ஸ் அணித் தலைவர் குமார சங்கக்காரவுக்கு 5 இலட்சம் ரூபாவும் அதிக சிக்ஸ்கள் (25) அடித்த அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி வீரர் ஷேன் வொட்சனுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியில் அம்பாட்டி ராயுடு அபார அரைச் சதம் குவித்து இந்திய மாஸ்டர்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அம்பாட்டி ராயுடு, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
சச்சின் டெண்டுல்கர் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அம்பாட்டி ராயுடு 50 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்களை விட குர்க்கீத் சிங் மான் 14 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சிங் 13 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் பின்னி ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஏஷ்லி நேர்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.
ப்றயன் லாரா, வில்லியம்ஸ் பேர்க்கின்ஸ் ஆகிய இருவரும் தலா 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
ஆனால், திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்வேன் ஸ்மித் 35 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமன்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் பெற்று அணியைப் பலப்படுத்தினர்.
மத்திய வரிசையில் தினேஷ் ராம்டின் (12 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்துவீச்சில் வினய் குமார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாபாஸ் நதீம் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அம்பாட்டி ராயுடு.