நடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற ‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இது தொடர்பாக இயக்குநரும், நடிகரும் தகவல்களை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகரும் இணைந்து இயக்குநருக்கு பிளாட்டினத்தால் தயாரிக்கப்பட்ட காப்பு ஒன்றை பரிசாக வழங்கி படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக விஸ்வரூபம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2 ‘ படத்தின் பணிகள் தொடங்க வேண்டும் என்பதற்காக இயக்குநரை ‘கைதி’ படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர் கார்த்தியும், அப்படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபுவும், லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து பரிசு ஒன்றை வழங்கினர்.
இதன் மூலம் ‘ கைதி 2 ‘ படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்பதனை சூசகமாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும், படத்தில் புதிதாக இணையவிருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் யார் ? என்பது குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.