தமிழ் சினிமாவின் கிராமப்புற நாயகன் சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு , மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் , பகவதி பெருமாள் , இளங்கோ குமரவேல், ஸ்ரீ ஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தமிழகத்தில் வாழும் ஈழ ஏதிலிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான் – மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அறிமுக காணொளி மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதே திகதியில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படமும் வெளியாகிறது. இதனால் மே முதல் திகதியன்று பிறந்த நாளை காணும் அஜித் குமார் ரசிகர்களின் ஆதரவு சூர்யாவிற்கு கிடைக்குமா? அல்லது சசி குமாருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதனிடையே சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ‘கருடன்’ திரைப்படம் வெளியாகி வணிக ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும் மீண்டும் மே மாதத்தில் சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ படம் வெளியாவதால் இந்தத் திரைப்படமும் வணிக ரீதியான வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.