அதிகரித்துள்ள வரிகள் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள வரிகள், உலகப் பொருளாதாரத்துக்கு பேரிடியாக அமையும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.
எளிதில் பாதிக்கப்படக்கூடியோரை அந்த வரிகள் பெரிதும் பாதிக்கும் என்று சாடிய அவர், மில்லியன் கணக்கானோருக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்கள், போக்குவரத்து மற்றும் மருந்துகள் போன்றவற்றின் விலைகள் உயரக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.