இங்கிலாந்து மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக இங்கிலாந்தில் பொருளாதார தாக்கம் ஏற்படும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள வணிகத் தலைவர்களிடம் நடந்த சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
நேற்றுப் புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிற்கு வரும் பொருட்களுக்கு வரிகளை அறிவித்தார்.
இதில் அனைத்து இங்கிலாந்து இறக்குமதிகள் மீது 10 சதவீத வரிகள் விதித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவீத வரிகள் விதித்து அறிவித்தார்.
“பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் உலகம் புதிய சகாப்தத்தில் நுழைகிறது” என்றும் இங்கிலாந்து பிரதமர் கூறினார்.
மேலும், அவர் தனது அரசாங்கம் இன்னும் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தைப் பெற நம்புவதாகவும் கூறினார். ஆனால், வரிகளுக்கு இங்கிலாந்து பதிலளிக்கும் போது எதுவும் மேசைக்கு வெளியே இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இங்கிலாந்து வர்த்தகச் செயலரான ஜோனத்தன் ரெய்னால்ட்ஸ், அமெரிக்கா எமது நெருங்கிய நட்பு நாடு. ஆகவே, நாம் அமைதியான அணுகுமுறையைத்தான் மேற்கொள்ள இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
வர்த்தகப்போர் உருவாகுவதில் யாருக்கும் விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, வரிகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.