சந்தையில் நெல் மற்றும் அரிசி விற்பனையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓரிரு போகங்கள் செல்லும். இதற்கு எனக்கு காலவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடமும், நுகர்வோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நுகர்வோரையும், விவசாயிகளையும் ஒரு குறுகிய தரப்பினர் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கவதற்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் ஸ்ரீ மகா விகாரையில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற வருடாந்த புத்தரிசி மங்கள நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றியதாவது,
விவசாயத்தை முன்னிலைப்படுத்தியதாகவே இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. விவசாயத்துக்குரிய பௌதீக வளங்கள் சிறந்த முறையில் காணப்படுகிறது. சாதகமான காலநிலையும் உள்ளது. விவசாயத்துக்கான அமைவிடமும் காணப்படுகிறது. விவசாய பரம்பரை அலகும் காணப்படுகிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் காணப்படுகின்றன.
ஒரு நாட்டின் பாரம்பரியம் தெரிவு செய்யப்படும் பொருளாதார வழிமுறையுடன் வெளிப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பாரம்பரியத்துடன் விவசாயம் தொடர்புப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய பொருளாதார கட்டமைப்பில் விவசாயத்துறை முன்னிலை வகிக்கிறது. விவசாயத்துக்காகவே நீர்பாசன கட்டமைப்புக்களும், சமுத்திரங்களும், குளங்களும் நிர்மாணிக்கப்பட்டன.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை நாங்கள் செயற்படுத்துவோம். விவசாயத்துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்போம். நீர்பாசனத்துறை அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய பயிர்ச்செய்கையில் விதை குறித்து பிரச்சினைகள் காணப்படுகிறது. விதைகளின் பல்லினத்தன்மை இன்று வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கே உரித்தான விவசாய விதை உற்பத்தி அபிவிருத்திகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் தமது விளைச்சலை விற்பனை செய்துக் கொள்ளும் போது பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நுகர்வோர் நியாயமான விலைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தலையீடு செய்துள்ளது.
விவசாய விற்பனைத் துறையில் தனி ஏகாதிபத்தியம் தோற்றம் பெற்றுள்ளது.ஒரு குறுகிய தரப்பினர் நெல் மற்றும் அரிசி ஆகியவற்றில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.நெல் களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. சிறந்த களஞ்சிய கட்டமைப்பின் ஊடாக நெல் பராமரிக்கப்படும். நெல் கொள்வனவுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் 5 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நெல் மற்றும் அரிசி விற்பனையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓரிரு போகங்கள் செல்லும்.இதற்கு எனக்கு காலவகாசம் வழங்குமாறு விவசாயிகளிடமும்,நுகர்வோரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.நுகர்வோரையும், விவசாயிகளையும் ஒரு குறுகிய தரப்பினர் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.