சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன் பார்ட் 2’ திரைப்படத்தின் வசூல் இந்திய மதிப்பில் ஐம்பது கோடியை கடந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில்,ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில்,விக்ரம், எஸ். ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘வீர தீர சூரன் பார்ட் 2’ படத்திற்கு ஓரளவு நேர்நிலையான விமர்சனங்கள் வெளியானது.
வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் நடிகர் விக்ரம் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தியதால் படத்தின் வசூல் உயரத் தொடங்கியது.
திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளி, காவல்துறை உயரதிகாரி, சட்ட விரோத செயலில் ஈடுபடும் குற்றவாளி இந்த மூவருக்கும் இடையே ஒருநாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள், விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இந்தத் திரைப்படம் முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் 52 கோடி வசூலித்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்படம் வசூலில் தப்பித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.