புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்

ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்

2 minutes read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

அந்தவகையில், தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாயக் களஞ்சிய கட்டிடத்தொகுதி மற்றும் 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை  நிறுவும் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின்  விஜயத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மற்றும் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது.

தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்நிலையத்தின் பணிகள் ஆரம்பித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாய களஞ்சி கட்டிடத் தொகுதி மற்றும் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் ஆகியவை இணையவழி (online) தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் இதில் இணைந்துகொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான  “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இந்தியாவின் என்டீபீசீ(NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின்  நிலையம், நீண்டகால மின் உற்பத்தி

விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாகும்.

சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,  இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும்.

N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை சுமார் 40% குறைத்தல், விவசாயப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துதல், நுகர்வோருக்கு தரமான உணவை வழங்குதல் மற்றும் விவசாய நிலைபேற்றுத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 5,000 மெட்ரிக் டொன் கொள்ளளவும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தம்புள்ளை விவசாய களஞ்சிய கட்டிடத்தொகுதி (குளிர் கிடங்கு) இன்று திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறு பயிர்களுக்கான உகந்த சேமிப்பு முறைகள் குறித்த ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த களஞ்சியத் தொகுதியில் ஆறு அறைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அறையும் வெவ்வேறு காலநிலை நிலைமைகளை உருவகப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலில்  நிறுவப்படும் இந்தக் களஞ்சிய கட்டிடத் தொகுதியின் மொத்தச் செலவு 524 மில்லியன் ரூபாவாகும். இதில், 300 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாவதோடு,  இதற்காக இலங்கை அரசாங்கம்  224 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.

5,000 மதஸ்த் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம், நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 மதஸ்த் தலங்களில் சூரிய மின் கலங்களை  நிறுவும் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் இந்திய அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, மேலும் இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

அதன்படி, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் 5 kW  கொள்ளளவைக் கொண்ட 5,000 சூரிய மின் கலங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வலுசக்திக் கட்டமைப்பில் 25 மெகாவாட் சூரிய மின்சக்தி திறனை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செலவு குறைந்த, நிலைபேறான மற்றும் நம்பகமான வலுசக்தி அமைப்பை நோக்கிய அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்துகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More