ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவேற்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் இரு நாட்டு மக்களிடையே அதிக நெருக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது:
“நாங்கள் விருந்தோம்பலை விரும்பும் மக்கள், மேலும் அனைத்து விருந்தினர்களையும் நாங்கள் அன்புடன் அரவணைக்கின்றோம். பாக்கு நீரிணையைக் கடந்து செல்லும் எமது நண்பர்களை மிகவும் அன்பான இதயத்துடன் அரவணைப்போம் என்பதை நான் நினைவுகூர்கின்றேன்.
சிறிய ஆனால் அன்பான இதயம் கொண்ட மக்களால் நிறைந்த இந்த அற்புதமான தீவுக்கு உங்கள் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் வருவதைப் பார்ப்பது எமது எதிர்பார்ப்பாகும்.
நாம் எப்போதும் நம் நண்பர்களிடம் கூறும் ஒரு விடயம், “மீண்டும் வாருங்கள்” என்பதுதான். எமது இதயங்கள் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த ஆரோக்கியத்திற்கும், இந்திய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும், நமது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் நட்பு என்ற உன்னத விருப்பங்களுக்காக நாம் ஒரே நோக்கத்துடனும் அன்பான இதயங்களுடனும் ஆசிர்வதிப்போம்.” – என்றார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட அமைச்சர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.