இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் அண்மையில் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர்.
எனினும், இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பிக்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.
இது தொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம் கூறும்போது, குறித்த இங்கிலாந்து எம்.பிக்கள் இருவரும் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.
இதேவேளை, மேற்படி எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பாக இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி கூறும்போது, “இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இது போன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.
“இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. 2 எம்.பி.க்களை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்” என்றார்.