செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேசம் பூரண ஒத்துழைப்பு! அரசைக் கவிழ்க்கவே முடியாது!! – ரில்வின் சில்வா திட்டவட்டம்

சர்வதேசம் பூரண ஒத்துழைப்பு! அரசைக் கவிழ்க்கவே முடியாது!! – ரில்வின் சில்வா திட்டவட்டம்

2 minutes read
“தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் . எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பண்டுவஸ்நுவர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது அரசமுறை விஜயமாக அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த விஜயத்தின்போது இலங்கைக்குச் சார்பாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

அன்று தேர்தலின்போது எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்தி அரசு க்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றனர். ஆனால், எமது அரசுக்கே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேபோன்று எமது அயல் நாட்டின் தலைவர் நரேந்திர மோடி நாட்டுக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுச் சென்றுள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுக்கின்றார்கள்.

அரசு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை. அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால், நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. திரிபோஷா நிறுவனம் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால், தற்போது திரிபோஷ உற்பத்தியை மேற்கொண்டு அதனை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இதுவே எமது முயற்சியாகும்.

அதேபோன்று மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அனுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இந்திய பிரதமர் இந்தத் திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாகக்  குறிப்பிட்டார்.

அதேபோன்று இந்தியாவிடம் இருந்து நாம் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளோம். தற்போது இந்தக் கடனுக்கான வட்டியைக்  குறைப்பதாக இந்தியப் பிரதமர் மோடி எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து  நாம் சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More