ரயில் நிலையம் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் வழியில் பிச்சைக்காரன் ஒருவனைப் பார்த்தார்.
இரக்கப்பட்ட அவர், அவன் முன்னால் விரிக்கப்பட்டிருந்த துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டு விட்டுச் சென்றார். சிறிது தூரம் தான் சென்றிருப்பார். அப்போதுதான் பிச்சைக்காரனின் சட்டைப் பையில் சில பென்சில்கள் இருந்தது அவர் நினைவுக்கு வந்தது.
மீண்டும் அங்கே திரும்பி வந்து, ‘நீ பென்சில் வியாபாரி என்பது தெரியாமல் பிச்சை அளித்துவிட்டேன். ஐந்து ரூபாய்க்குரிய பென்சில்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அப்படியே இரண்டு பென்சில்களை எடுத்துச் சென்றார்.
சில மாதங்கள் சென்றன- –
விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்தப் பயணி சென்றிருந்தார். அங்கே கோட், சூட் அணிந்த ஒரு, ‘டிப் – டாப்’ ஆள் இவர் அருகே வந்து, ‘வணக்கம்’ சொன்னார். அப்படியே தன்னை யாரென்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதாவது அந்த நபர், அன்று ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தவர்.
அவரின் புதிய தோற்றம், பயணிக்கு வியப்பைத் தந்தது. அப்போது அந்தப் பிச்சைக்காரர், ”நான் பிச்சை எடுத்துத் திரிந்தபோது, எனக்களித்த காசுக்கு பென்சிலை எடுத்துச் சென்றீர்கள். அப்போது தான் என் ஞானக் கண் திறந்தது.
”பிச்சைக்காரன் என்ற கீழான நிலையில் இருந்து நாமும் ஏன் மனிதனாக அதிலும், வியாபாரியாக மாறக்கூடாது என்ற கேள்வி என் உள் மனத்தில் எழுந்தது. உழைப்பில் கவனம் செலுத்தினேன். இன்று, இந்த ஊரில் அனைவரும் மதிக்கத்தக்க வியாபாரியாக மாறி விட்டேன்,” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
அப்போ நீங்க?
நன்றி : பிரியா ஆனந்த் | இன்று ஒரு தகவல்