செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் விண்வெளி ஆசை நிறைவுவேறாமல் சென்றார் ஸ்டீவன் ஹோவ்கிங்!!!

விண்வெளி ஆசை நிறைவுவேறாமல் சென்றார் ஸ்டீவன் ஹோவ்கிங்!!!

1 minutes read

இயற்பியல்துறை கோட்பாட்டு வல்லுனர் ஸ்டீவன் ஹோவ்கிங் தமது 76 வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர். இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி பிறந்த ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் என்று முழுப்பெயரைக் கொண்ட அவர், புரட்சிகரமான பல்வேறு இயற்பியல் கோட்பாட்டு தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார். அவர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக செயற்பட்டுவந்தார்.

அண்டவியல் மற்றும் சக்தி ஈர்ப்பு துறைகளில் அவர் முக்கிய நிபுணராக விளங்கினார். கருந்துளைகளுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான சார்பியல் பற்றிய அவரது கோட்பாட்டுக் கட்டுரைகள் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக கருந்துளைக்குள் பிரவேசிக்கின்ற ஒளி உள்ளிட்ட எந்தவிடயமும், மீள வெளியேற முடியாது என்ற கருத்துக்கு மாறாக, கருந்துளையினுள் இருந்து துணிக்கைகள் வெளியேறுகின்றன என்பதையும், காலப்போக்கில் அந்த துணிக்கைகள் இல்லாமல் போய்விடும் என்றும் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தியுள்ளார்.

21 வது வயதிலேயே, அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட அவர், உடல் இயக்கத்தையும், பேச்சையும் இழந்தார். இந்த நிலையில் அவர் கணினியூடாகப் ‘பேச்சுத் தொகுப்பி’ என்ற தொழில்நுட்ப கருவியின் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார். இவ்வாறே அவர் பல ஆண்டுகளாக இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வந்துள்ளார். இவரால் எழுதப்பட்ட நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு என்ற அறிவியல் நூல் உள்ளிட்ட பல நூல்கள் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. 2007 ஆம் ஆண்டு அவரது 65வது வயதின் போது, தாம் விண்வெளிக்கு பயணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்த போதும், அவரால் அந்த பயணத்தை இறுதிவரையில் மேற்கொள்ள முடியவில்லை.

இளம் வயதிலேயே உடல்இயக்கத்தை இழந்தாலும், நம்பிக்கையுடன் போராடினால் வாழ்வில் வெற்றிப் பெற முடியும் என்று நிரூபித்த மேதைகளில் ஸ்டீவன் ஹோவ்கிங் முக்கியமானவராவார். அவரால் எதிர்வு கூறப்பட்ட பலவிடயங்கள் குறித்து நவீன அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கின்றன. குறிப்பாக அண்மைக்காலமாக பிரபல்யம் அடைந்து வரும் பொட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் உருவாக்கம் மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்ற அவரது எதிர்வு கூறல் முக்கியமானது. மேலும் இந்த பூமி சில நூற்றாண்டுகளில் மனிதர்களால் வாழ முடியாத நிலைக்கு சென்றுவிடும் என்பதால், அதற்குள் மனிதன் வாழக்கூடிய மாற்றுக் கிரகம் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் அவரது தொடர்ச்சியான வலியுறுத்தலாக இருந்து வந்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More