பாடகர் ரகுநாதன் இசைநிகழ்வுக்காக இலண்டன் வருகை தந்ததையிட்டு இச்சிறப்புப் பதிவு இடம்பெறுகின்றது.
இலங்கையில் மட்டுமல்ல இன்று புலம்பெயர் நாடுகளிலும் இசையினூடே வலம் வரும் எம்மவர் பாடகர் ரகுநாதன் தற்போது இலண்டன் வந்துள்ளார். தென்னிந்திய பின்னணிப் பாடகர்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இருந்து அழைக்கும் கலாச்சாரத்தின் மத்தியிலும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் தமது மண்ணின் மைந்தன் பாடகர் ரகுநாதன் அவர்களையும் பிரத்தியேகமாக அழைத்துள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை 17ம் திகதி (நாளை) மாலை இலண்டனில் நடைபெறும் நடேஸ்வரா கல்லூரியின் இசைநிகழ்வில் இவரது பாடல்கள் ரெயின்போ இசைக்குழுவில் ஒலிக்க இருக்கின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நீண்ட காலமாக இருந்த நடேஸ்வராக் கல்லூரி சமீபத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மீள் நிர்மாணம் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு பழைய மாணவர்களை சேர்ந்தது. காலத்தின் தேவை கருதி இவ்வாண்டு நடேஸ்வராவின் சூப்பர் சிங்கர் நைட் எனும் இசை நிகழ்வு லண்டன் ஹரோ பகுதியில் நடத்துவதன் மூலம் பிரித்தானிய வாழ் பழைய மாணவர்கள் தமது பங்களிப்பினை செய்ய உள்ளனர். இந்த முக்கியமான தருணத்தில் நடக்கும் நிகழ்வுக்கு பழைய மாணவன் என்ற முறையில் தான் பங்கு கொள்வது பெரு மகிழ்வைத் தருவதாக பாடகர் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பாடகர் ரகுநாதனை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளான முன்னால் ப்ரெண்ட் நகரபிதா கனா நகிரதன், சின்னத்துரை சற்குணசீலன் மற்றும் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை சண்முகநாதன் ஆகியோர் வரவேற்று இருந்தனர்.
பாடகர் ரகுநாதன் இலங்கையின் காங்கேசன்துறையில் பிறந்து நடேஸ்வராக் கல்லூரியில் படித்துள்ளார். சங்கீதத்தின் மீதுள்ள பெரு விருப்பால் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் தனது சங்கீதக் கல்வியைத் தொடர்ந்தார். சித்தூர் சுப்ரமணியபிள்ளை எம் ஏ கல்யாண கிருஷ்ண பாகவதர் போன்ற இந்திய ஆசிரியர்களிடமும் இவர் இராமநாதன் கல்லூரியில் சங்கீதம் படித்துள்ளார். இவரது குடும்பம் சங்கீத பின்னணியில் அமைந்தது. தந்தையார் திரு நாகமுத்து இலங்கை வானொலியில் சங்கீதக் கலைஞராக கடமையாற்றியவர். இவரது சங்கீதப்பயணம் சுமார் 22 வருடங்களாக மாத்தளை இந்துக்கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பயணித்தது. தனது தந்தையாரைப் போலவே இவரும் இலங்கை வானொலியிலும் மற்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியிலும் இசைக் கலைஞராக கலந்து கொள்கின்றார்.
இலங்கையில் மெல்லிசை துறையில் இவரது ஈடுபாடு அளப்பரியது. வானொலிகளிலும் சரி மேடை நிகழ்ச்சிகளிலும் சரி தொடர்ந்து இசைத்துவரும் இவர் மோகன்ராஜ்ன் அப்சராஸ் இசைக்குழுவில் முக்கியமான பாடகராவார். யாழ் ராகம்ஸ், சாரங்கா, ராஜன்ஸ் இசைக்குழு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள முன்னணி இசைக்குழுக்களுடனும் பாடி வருகின்றார்.
தனது முயற்சியில் மானிப்பாய் வைரவர் ஆலயத்துக்கு “ஆனந்த இசைமாலை” எனும் பாடல் கோர்வையை வெளியிட்டுள்ளதுடன் மாத்தளை அம்மன் கோவிலுக்காக எம் எஸ் செல்வராஜாவின் இசையில் இவர் பாடிய “மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன் புகழ் பாடுதம்மா” என்ற பாடல் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்த பாடலாகும். இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையிலும் பெருமளவான பக்திப்பாடல்களை பாடியுள்ளார். ஈழத்தமிழ் திரைப்படமான “பாதை மாறிய பருவங்கள்” இல் இடம்பெறும் எழுத்தோட்டப் பாடலையும் பாடியுள்ளார்.
தென்னிந்திய பிரபல திரையிசை பாடகர்களான சுசிலா, ஜிக்கி, சௌந்தராஜன், ஜானகி, யமுனா ராணி, எல் ஆர் ஈஸ்வரி, வாணிஜெயராம் முதல் இன்றைய இளம் பாடகர்களான சோனியா, அனிதா, ஜெசிக்கா என அனைவருடனும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இந்தியா முதல் அணைத்தது மேலை நாடுகளுக்கும் இசை நிகழ்வுக்காக பயணம் செய்த இவர் இலண்டனுக்கு இது பதினைந்தாவது தடவையாக பயணம் செய்துள்ளார்.
இலங்கை அரசின் ஜனாதிபதி விருது, சங்கீதரத்னம், இசைஞானமணி, நாதக்குரலோன், கலாரத்னா போன்ற இன்னும் பல விருதுகளை தனது இசைவாழ்வில் பெற்றுள்ளார். மனைவி திருமதி நிர்மலா மற்றும் இரண்டு மகள்கள் இரண்டு மகன்களுடன் மாத்தளையில் வசித்து வருகின்றார். ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் இசை, பாடல், சங்கீதம் என தனது வாழ்வை மனதுக்குப் பிடித்தவாறு வாழும் பாடகர் ரகுநாதன் தனது வாழ்வில் ஒருமுறையாவது இந்திய தமிழ் சினிமாவில் பாடவேண்டுமென்ற தீராத ஆசையில் இருக்கின்றார். அவரது ஆசை நிறைவேறவும் அவரது இசைப்பயணம் மேலும் சிறக்கவும் வணக்கம் லண்டன் வாழ்த்துகின்றது.
சுப்ரம் சுரேஷ் – வணக்கம் லண்டனுக்காக