2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் தம்மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்போதும் சிறிதளவேனும் குறையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் கல்லூயில் பழைய மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் நேற்று ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் காணும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சவாலை வெற்றி கொள்ள அரசியல் வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார். இந்தநிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த யுத்தக்காலத்தினால் இலங்கையின் அபிவிருத்தியும், பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்துள்ள மக்கள் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், உள்நாட்டுக்கு மாத்திரம் இன்றி, முழு உலகத்துக்கும் தலைவராக முடியும் என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தற்போது தனி நாட்டைக் கேட்கவில்லை. தங்களது பிரச்சினை பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது. நாடு மிகப்பெரிய துன்பங்களையும், பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. இலங்கையை விட பின்தங்கி இருந்த பல நாடுகள் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளன. உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. இந்த நிலையில், ஜனாதிபதி, தாம் எதிர் கொள்கின்ற சவால்களில் இருந்து மேலெழ வேண்டும்.
தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனாலும் அவருக்கு இந்த விடயத்தில் இருக்கும் சவால்களை சமாளித்து, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜனாதிபதி செய்வாராக இருந்தால், சர்வதேச சமுகம் அவரை உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும். எனவே காலதாமதம் இன்றி ஜனாதிபதி தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.