சிரிய ஜனாதிபதி பஷால் அல்-அசாட், தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியான கிழக்கு கூட்டாவுக்கு விஜயமொன்றை, மேற்கொண்டார். அங்கு அவர், எதிரணிப் போராளிகளுக்கு எதிராகப் போராடி வரும் படையினரைச் சந்தித்தோடு, இடம்பெயர்ந்துள்ள மக்களையும் சந்தித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கூட்டா மீதான இராணுவ நடவடிக்கையினல், சிரிய அரசாங்கப் படைகள் முன்னேறி வருவதோடு, விரைவில் வெற்றியைப் பெற்றுவிடும் எனக் கருதப்படும் நிலையிலேயே, அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் நோக்கில், ஜனாதிபதியின் விஜயம் அமைந்தது.
மறுபக்கமாக, பின்னடைவைச் சந்தித்துவரும் எதிரணிப் போராளிகள், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஏனைய பகுதிகளுக்குச் செல்வதற்கோ அல்லது ஆயுதங்களை முற்றாகக் கைவிடுவதற்கோ, எதிரணிப் போராளிகள் தயாராக இருக்கின்றனர் என, போராளிகளுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறையிலேயே ஹொம்ஸ், அலெப்போ உள்ளிட்ட பல பகுதிகளை, ஜனாதிபதி அசாட்டின் அரசாங்கம் பெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது ஆயுதங்களைக் களைவதற்கோ தயாராக இல்லை என்பதையே, போராளிகள் தரப்புக் கூறி வருகிறது.
கிழக்கு கூட்டா பகுதியை, மூன்று பகுதிகளாக ஏற்கெனவே பிளவுபடுத்திவிட்ட சிரிய அரசாங்கப் படைகள், அம்மூன்று பகுதிகளிலும் உள்ள போராளிகளுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பகுதிகளிலும் உள்ள போராளிக் குழுக்களோடு, தனித்தனியான பேச்சுவார்த்தைகளை, சிரிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அரசாங்கத்துக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது.