மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று(21) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் உள்ளுராட்சி தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்கள் முன் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட எமது அமைப்பின் சார்பான உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள் மக்கள் முன்னிலையில் உறுதியுரை எடுத்திருக்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கான பணிகளை எப்போதும் மக்களின் முன்னிலையிலேயே செயற்படுத்த வேண்டியவர்கள். மக்களின் தேவைகளை, மக்கள் நலனை, மக்களின் விருப்பம், மக்களுடைய ஆலோசனை, மக்களின் அவதானிப்பு, மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையிலே செய்ய வேண்டும்.
தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும்.
அரசியலிலும் நிர்வாகங்களிலும் என்ன நடக்கிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்னென்ன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன? என்ன திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதையெல்லாம் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அப்படிச் செய்யும்போது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறையும். ஊழலும் பாரபட்சமும் ஏற்படாது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் இரகசியமாக எதையும் செய்யும்போதே ஊழலும் பாரபட்சமும் குறைபாடுகளும் நிகழ்கின்றன. இது மக்களுக்கு விரோதமான ஒரு செயற்பாடாகும். ஆகவேதான் நாம் மக்களின் முன்னிலையில், மக்கள் அறியக் கூடியதாக எமதுநடவடிக்கைகள் அமைய வேண்டும் என விரும்புகிறோம்.
இதையே இன்றைய உலகமும் வழிமொழிகிறது. அனைத்திலும் மக்களுக்கு உரித்தும் மக்களுடைய பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தை உருவாக்க வேண்டும்.
நாங்கள் உரிமைக்காகப் போராடியவர்கள். அதற்காக உயர்ந்த அர்ப்பணிப்புகளைச் செய்தவர்கள். ஆகவே எமது மக்களுக்கு எல்லாவற்றிலும் உரித்தும் உரிமையும் உண்டு. கேள்வி கேட்கவும் வழிகாட்டவும் ஆலோசனை சொல்லவும் கூடிய உரிமையும் தகுதியும் மக்களுக்கு உண்டு. எனத் தெரிவித்த அவர் இந்த சிந்தனையின் அடிப்படையில், எமது மக்களின் விருப்பத்துக்கும் தேவைக்கும் அமைய மக்களுக்கு விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் எமது பிரதிநிதிகள் செயற்படுவார்கள் என்று உறுதியுரைக்கின்றோம்.
இது எமது அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். எப்போதும் மக்களின் நலனையே முதன்மைப்படுத்திச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும் என்ற எமது நோக்கத்தின் அடிப்படையில் இந்த பதவி ஏற்பும் அதற்கான உறுதி உரைப்பும் நடந்துள்ளது.
எதையும் மக்களுக்கு முன்னிலையில், வெளிப்படைத்தன்மையோடு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதே எமது அரசியல் அடிப்படையாகும். இதையே நாம்நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அரசியல் உரிமைகளையும் அபிவிருத்தியையும் சமாந்தரமாகச் செய்ய வேண்டும். அப்படிச்செய்யமுடியும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு. புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பாகச் செயற்படுவோமாக இருந்தால் நாம் எண்ணிய இடத்துக்குச் சென்றடையமுடியும். இலக்கை, எமது இலட்சியத்தை நிறைவேற்றலாம்.
எமது மக்கள் ஆற்றலும் துணிச்சலும் சிறந்த பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவர்கள். அர்ப்பணிப்பில் தலைசிறந்தவர்கள். மக்களின் விடுதலைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்தவர்களைக் கொண்ட மண்ணும் சமூகமும் எமது.
ஆகவே அந்த வழியில் நாம் மக்கள் நலனுக்காகவும் எமது மண்ணின் உயர்வுக்காகவும் எம்மைஅர்ப்பணித்துச் செயற்படுவோம். எமது வளர்ச்சியும் ஆற்றல் வெளிப்பாடுமே எமது இனத்தின்விடுதலையைச் சாத்தியமாக்கும்.
நாம் மக்களுக்கு வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்துவதற்கு எமது பங்களிப்பைச் செய்வோம். ஊழலற்ற நிர்வாகத்துக்காகப் பாடுபடுவோம். பிரதேசங்களின் வளர்ச்சிக்கும் மக்களுடைய நலனுக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்படும் திட்டங்களையே முன்மொழிந்து வழிப்படுத்துவோம். பிரதேசஅபிவிருத்தியில் சமநிலையைக் கொண்டு வருவோம். பாரபட்சங்களுக்கு எதிராகச் செயற்படுவோம் எனக்குறிப்பிட்ட அவர்
எமது மக்களின் தேவைகளை மையப்படுத்தி, எமது பிரதேசங்களின் வளர்ச்சியை மனதிற் கொண்டே நாம் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் தனித்தனியான தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கினோம். அந்தத் தேர்தல் விஞ்ஞாபனங்கள் உண்மையில் எமது பிரதேசங்களின் வளர்ச்சிகான வழிகாட்டிகள் என்று நான் துணிந்து சொல்வேன். அவற்றை நாங்கள் உருவாக்கும்போது அதற்கான நிபுணத்துவத்துடனேயே செய்தோம்.
இதை நீங்கள் படித்து அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே படித்தவர்களுக்கு அதன் பெறுமதிவிளங்கும்.
நாம் பங்கு பற்றுகின்ற பிரதேச சபைகளிலும் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்மொழியப்பட்டவிடயங்களின் பொருத்தப்பாட்டை வலியுறுத்துவோம். எனவும் தெரிவித்தார்
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சு.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதத் தலைவர்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.