நெருக்கடி மிக்க காலத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சேவையை செய்தவர் அமரர் கே. கணேஷ் அவர்கள். யாழ்ப்பாண இடப்பெயர்வும் தொடர்ந்து வந்த ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கையும் மக்களை வவுனியாவுக்கு உந்தி தள்ளிய காலம். அந்தக் காலத்தில் பொதுமக்கள் பட்ட இன்னல்களும் துன்பங்களும் சொல்லிலடங்காதவை. பாதுகாப்பு கெடுபிடிகள், வதிவிட அனுமதிப்பத்திரம் பெறுவதில் இருந்த சிக்கல்கள், பயண அனுமதி பெறுவதில் இருந்த கஸ்ரங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களின் பிரச்சினைகள், இளைஞர்களின் கைது என பலவழிகளிலும் மக்கள் இன்னல் பட்டு அரச அதிபரின் உதவி நாடி அவரது அலுவலக வாசலில் நீண்ட வரிசை காத்து நிற்கும். இப்படியான இடர் காலத்தில் தன்னலம் பாராது உழைத்தவர் அமரர் கே கணேஷ் அவர்கள்.
இடம் பெயர்ந்த முகாம்களில் தங்கியிருந்த பெருமளவு மக்கள் சந்தித்த வாழ்க்கைப் பிரச்சினைகள், உணவுப் பங்கீடு, காணாமல் போதல் போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு வடிகாலாக மக்கள் இவரிடம் உதவி நாடி சென்றனர். குறிப்பாக A9 பாதை மூடப்படுவதும் திறக்கப்படுவதுமாக இருந்து பின்னர் அதற்க்கு மாற்று வழி கண்டு பிடித்து அதனை செயற்படுத்துவது என பல சவால் நிறைந்த சேவைகளை மக்களுக்காக வழங்கிய ஒரு மகத்தான மனிதனை தமிழ் சமூகம் இழந்து நிற்கின்றது.