வங்கதேசம்: காக்ஸ் பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதி முகாம்களில் ஒரு நாளைக்கு 60 குழந்தைகள் பிறப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைய தொடங்கிய ஆகஸ்ட் 2017 முதல் கணக்கில் எடுத்துக் கொண்டால, கடந்த 9 மாதங்களில் 16,000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாம்களில் பிறந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3000 குழந்தைகள் மட்டுமே சுகாதார வசதிகளுக்கிடையே பிறந்துள்ளன.
இதில் குழந்தை பெற்றுள்ள பெரும்பாலான தாய்மார்கள் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல மோசமான சூழல்களை எதிர்கொண்டவர்கள் எனக் கூறப்படுகின்றது. அதே சமயம், “பாலியல் துன்புறுத்தலின் தொடர்ச்சியாக அல்லது அதன் விளைவாக எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்பதை அறிவது சாத்தியமற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார் யூனிசெப் வங்கதேச பிரதிநிதி எடுயோர்ட் பெய்க்பெடர்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்ந்து ரக்ஹைன் பகுதியில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.