நாளை நடைபெற இருக்கும் “ஒரு நடை” மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. பிரித்தானியாவில் இயங்கும் DATA அமைப்பு கடந்த மூன்று வருடங்களாக தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ் பரா விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இந்த நிகழ்வு இன்றைய காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய வகிபாகத்தை கொள்கின்றது.
வருடம்தோறும் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுக்கு வேண்டிய நிதியினை திரட்டும் நோக்குடன் நாளை இலண்டன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என மூன்று இடங்களிலும் “ஒரு நடை” எனும் சரிடி வாக் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் ஈட்டப்படும் நிதியானது மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கும் விளையாட்டு நிகழ்வுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் பயன்பட உள்ளது.
இலங்கையில் ஈழப்போர் ஓய்வுபெற்று ஒன்பது வருடங்கள் கடந்தபோதும் அதன் தாக்கம் இன்றும் ஆழமான வடுக்களாக காட்சியளிக்கின்றது. ஈடு செய்யமுடியாதவர்களாக அவையவங்களை இழந்து வாழ்வின் துயருறும் கணங்களை அனுபவித்து போரின் சாட்சியாக இருக்கும் இவர்கள் மாற்றுத் திறனாளிகளாக மாறி வருகின்றார்கள். வீழ்வோமென நினைத்தாயோ என நெஞ்சுக்குழிக்குள் எழுதிவைத்துவிட்டு எழுந்து நிற்கின்றார்கள்.
அவர்களின் வாழ்வும் வளம்பெறவேண்டும். ஒரு காலத்தில் கம்பீரமாக போர்முரசு கொட்டி நிமிர்ந்து நின்றவர்கள் இன்று சக்கர நாற்காலிகளிலும் பனையோலைப் பாய்களிலும் முடங்கிக் கிடக்கின்றார்கள். அவர்களிடமிருந்துதான் இந்த எழுச்சி, அவர்களிடமிருந்துதான் இந்த நம்பிக்கை, மாற்றுத்திறனை வளர்த்துவரும் இவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டியது நிதர்சனம்.
நாளை நடைபெறும் “ஒரு நடை” நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஒழுங்கமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.