பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
இது Tale of two cities (இரு நகரங்களின் கதை) போன்று பரம்பரை பரம்பரையாக இலட்சக்கணக்கானவர்கள் வாசித்த கதை போலல்லாது சில நூறு பேர் என்றாலும் ஆவலுடன் நேசித்து வாசித்ததனால் மேலும் துணிந்து எழுத ஆவல் கொண்டேன்.
1. காளி கோவில் பொங்கல்
பண்ட வண்டில்
முதலில் ஊர்க்கூட்டம் கூட்டப்படும். வைகாசி மாதத்தின் எந்த வெள்ளி பொங்கல் எனத் தீர்மானிக்கப்படும். பின் ஒரு திங்கட்கிழமை மூன்று அல்லது நான்கு பண்ட வண்டில்கள் சாவகச்சேரி நோக்கிப் புறப்படும். இதுவே புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலானால் பதினைந்து இருபது வண்டில்கள் புறப்படும். பெரியபரந்தன் காளிகோவிலின் நான்கு பண்ட வண்டில்களும் சாவகச்சேரிச் சந்தையில் பலாப்பழம், மாம்பழம், ஏனைய அபிஷேகத் திரவியங்கள் வாங்குவதுடன் மீசாலையில் பண்டங்கள் சேகரித்து (பழம், தேங்காய், இளநீர்) அங்கிருந்து நேராகப் பெரிய பரந்தன் நோக்கி வண்டில் ஊர்வலம் சென்றுவிடும். வண்டில்களுடன் பூசாரியாரும் மூன்று கிராம மக்களும் செல்வார்கள். இதுவே கரவெட்டித் திடல் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆயின் கொடிகாமம், முகமாலை, பளை, இயக்கச்சி என்று பக்தர்கள் வீதிதோறும் காத்திருந்து பண்டம் வழங்குவர். நாகதம்பிரானுக்கு கோழிகள் மட்டும் நூறு, இருநூறு தேறும். ஆனால் நூற்றாண்டுகளாகக் கற்களை மட்டுமே கடவுளாகக் கும்பிட்ட பக்தர்களைக் காளி என்றும் கைவிட்டதில்லை.
பண்ட மரவடி
பரம்பரை பரம்பரையாகப் பண்ட வண்டில்கள் நிற்பாட்டுவதற்கு பனை, பூவரசு புளிய மரங்கள் நிறைந்த மரவடி உண்டு. அங்கு பண்டங்கள் இறக்கப்படும். ஊர்மக்கள் தமது பங்கிற்கு அரிசி, தேங்காய், நெய், வாழைக்குலை முதலியவற்றைப் பண்ட மரவடியில் கொண்டு வந்து சேர்ப்பர்.
மூப்பர்கள்
பறைமேளம் அடிப்பவர்கள் மூப்பர்கள் என்று அழைக்கப்படுவர். இரண்டு பெரிய மேளங்கள் அடிப்பவர்களும் இரண்டு தொந்தொடி என அழைக்கப்படும் சிறிய மேளம் அடிப்பவர்களும் வருவார்கள். அவர்களுக்கு சாப்பாடு, கள்ளு, சாராயம் என்பன தாராளமாக வழங்கப்படும். அவர்கள் களைத்துவிடாது இராகமாக அடிப்பதன் மூலமே கலையாடுபவர்களின் ஆட்டமும் அமைந்திருக்கும். கலை வராதவர்களையும் அவர்களது பறை ஆடவைத்து விடும். மூப்பர்கள் கூடுதலாக மட்டுவிலிருந்தே வருவார்கள்.
பிள்ளையார் பொங்கல்
வியாழக்கிழமை குழந்தையன் மோட்டைப் பிள்ளையாருக்கு பொங்கல் நடைபெறும். அது எல்லோருக்கும் பொதுவாக ஒரு பெரிய பானை வைத்து பொது வழந்தாகப் பொங்கப்படும். அங்கு கலையாட்டம் அவ்வளவு இருக்காது. பண்ட வண்டில்கள் வந்ததிலிருந்து ஊர்மக்கள் யாவருக்கும் பண்டமரவடியில் தான் சமையல், சாப்பாடு. ஒருவரும் தம்வீட்டில் உலை வையார்.
பொங்கலின் போது மூப்பனார் மிக முக்கிய புள்ளி. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் கட்டாடியாருக்கே உரியது. அவர் வந்து வெள்ளை கட்டியதன் பின்னரே (வெள்ளை வேட்டி, வெள்ளைச் சேலை) எந்த வேலையும் செய்யலாம். சாவகச்சேரியிலிருந்து வந்த காவடிக்காரரே சாமிகளையும் பூமாலை, மினுங்கல் மாலை கொண்டு அலங்கரிப்பர்.
காளி கோவிலில் எத்தனை தெய்வங்கள் உண்டோ, அத்தனை தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வழந்து (பானை) வைத்துப் பொங்கப்படும். வழந்து பரம்பரை, பரம்பரையாக உரிமையானவர்களுக்கே வழங்கப்படும். நேர்த்தி செய்தவர்களுக்கு பக்கப்பானை எனும் சிறிய பானையில் பொங்க அனுமதிக்கப்படும்.
ஆடு, கோழி வெட்டல்
கொடுமை. சொல்லவொண்ணாத கொடுமை. அரசு சட்டம் போட்டுத் தடுக்கும் வரை ஒரு வெள்ளைக்கிடாய், ஒரு கறுப்புக் கிடாய் மற்றும் நேர்த்தியாக வந்த வெள்ளை, கறுப்பு சேவல்கள் வெட்டல். பொங்கலின் இறுதியில் நன்கு அலங்கரிக்கப்பட்டு, மாலையிடப்பட்ட ஆடுகள் உண்ண உணவு கொடுத்து, அவை உணவை முகர்ந்து பார்க்கும் போது கழுத்தில் ஒரே வெட்டாக வெட்டிப் பலி கொடுப்பார்கள். வெள்ளைக் கிடாயின் இறைச்சி மூப்பர்களுக்கும் கறுப்புக் கிடாய் இறைச்சி கட்டாடியாருக்கும் போய்ச்சேரும். அரசு சட்டத்தை கடுமையாக்கி உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுத்த பின்னர், இளநீர்களையும் அவற்றின் மேல் வைத்த தேசிக்காய்களையும் ஒரே வெட்டாக வெட்டி மனத்தை திருப்திப் படுத்திக் கொண்டார்கள்.
தீக்குளிப்பு
பெருமரங்களை அடுக்கி வியாழன் காலையே எரிக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து விறகுகள் போட்டுப் போட்டு செந்தணலாய் ஆகுமட்டும் எரிப்பார்கள். கலையாடும் பூசாரிமார் பறைமேளத்தின் தாளத்திற்கேற்ப இத்தணலில் நின்று ஆடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து கதிர்காம யாத்திரை போக விரும்பியோரும், நேர்த்திக்கடன் செய்வோரும் தீக்குளிப்பர். கதிர்காம யாத்திரை போக விரும்பியோருக்கு காலில் தீப்புண் ஏற்பட்டால் அவரது யாத்திரைக்கு காளி அனுமதி அளிக்கவில்லை என்று பொருள். அனுமதி பெற்றோர் வன்னிவிளாங்குளம் சென்று அங்கு சேர்ந்த யாத்திரிகர்களுடன் வற்றாப்பளை அம்மன் பொங்கலுக்குப் போய், அங்கிருந்து தென்னை மரவடி, மட்டக்களப்பு ஊடாகக் கதிர்காமம் செல்வர்.
கலையாட்டம்
காளிக்காகப் பிரதம பூசகரும், வீரபத்திரர், வைரவர் போன்ற பிறதெய்வங்களுக்கு உதவிய பூசாரிமாரும் கலையாடுவர். சில பெண்களும் கலை வந்து ஆடுவர். இரவு, இரவாகக் கலையாட்டம் நடைபெறும். கலையாடுவோர் கலையாடுவதுடன் கட்டும் சொல்வர். தீராத நோயாளிகள், பேய் பிடித்தோர் முதலியவர்களுக்கும் திருநீறு இட்டு, நோயை மாற்றுவதற்குரிய வழிவகைகளைக் கட்டாகச் சொல்வர். பக்தர்கள் யாவருக்கும் பிரதம பூசாரி திருநீறு இடுவார்.
எட்டாம் மடை
பொங்கல் நடந்து அடுத்த வெள்ளி மோதகம், வடை, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் முதலியன படைத்து மடை போடப்படும். மடையின் போதும் கலைலயாட்டம் இடம்பெறும். பொங்கலின் போது தவறியவர்களுக்கு கட்டு சொல்லலும், திருநீறு இடலும் இடம்பெறும். சிறுவர்களுக்கு போதும் போதுமென்று சொல்லுமட்டும் மோதகம், வடை, பழங்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு எப்போது வரும், பொங்கலும் மடையும் எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் பெரியோரும் சிறுவரும் தத்தம் வீடு போய்ச் சேர்வர்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/